17 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் தமிழகத்தில் காங்., ஆட்சி இல்லை: பொறுப்பாளர் முன்னிலையில் கட்சியினர் ஆதங்கம்
17 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் தமிழகத்தில் காங்., ஆட்சி இல்லை: பொறுப்பாளர் முன்னிலையில் கட்சியினர் ஆதங்கம்
ADDED : மார் 18, 2025 05:59 AM

தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 'அதிகாரப் பகிர்வு, அடிமட்ட தொண்டர்களுக்கும் கிடைக்க வேண்டும்' எனக் கூற, உற்சாகம் அடைந்த மாநில நிர்வாகிகள், 'கேரளா பாணியில், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம்' என, காரசாரமாக பேச, அனைவரும் கை தட்டி வரவேற்றுள்ளனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என, அம்மாநில காங்கிரஸ் அறிவித்த நிலையில், தமிழக காங்கிரசிலும் மாற்றம் ஏற்படத் துவங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக கிரிஷ் சோடங்கர் நியமிக்கப்பட்ட பின், இரு மாநிலங்களிலும், இரு முறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். ஆனால், இரு முறை சென்னை வந்த கிரிஷ் சோடங்கர், முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவில்லை.
நேற்று முன்தினம் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அவரது ஆலோசனைக்கு பின், அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி, 'புதுச்சேரியில், 'இண்டி' கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. 'வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைமை யில்தான் கூட்டணி; தி.மு.க., விரும்பினால் தனித்து நிற்கலாம்' என, அதிரடியாக அறிவித்தார். நேற்று முன்தினம், சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், கிரிஷ் சோடங்கர் பங்கேற்றார். இக்கூட்டத்தில், அவரும், மாநில நிர்வாகிகளும் காரசாரமாக பேச, அதை காங்கிரசார் கைதட்டி வரவேற்றுள்ளனர்.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சிலர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., காலத்தில், சாராயக் கடைகள் வழியாக அ.தி.மு.க.,வினருக்கும், ஜெயலலிதா காலத்தில், 'டாஸ்மாக் பார்'கள் வாயிலாக, அ.தி.மு.க.,வினருக்கும், வருமானம் கிடைத்தது. தற்போது, தி.மு.க., வினருக்கு வருமானம் வருகிறது. ஆனால், கூட்டணியில் உள்ள காங்கிரசாருக்கு, எந்த வருமானமும் இல்லை. வாரியத் தலைவர், கூட்டுறவு சங்க நிர்வாகி, கோவில் அறங்காவலர் என, எந்த பதவியும் தரவில்லை. கட்சி வளர்க்க பணம் தேவை. காங்கிரசாரிடம் அது இல்லை.
காங்கிரஸ் கட்சி வளரக் கூடாது என, தி.மு.க., விரும்புகிறது. அதற்கு நாம் இடம் தரக் கூடாது. கேரளாவில் ஏழு எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் காங்கிரசுக்கு இருந்தனர். இருபது ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருந்தனர். கருணாகரன் என்ற தனிமனிதனின் முயற்சியால், காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தது. தமிழகத்தில், 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். நம்மால் ஏன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியவில்லை. தி.மு.க.,விடம் காங்கிரஸ் அடிமையாக இருப்பதாலேயே இதெல்லாம் நடக்கிறது. இனியாவது ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
- நமது நிருபர் -