தி.மு.க.,வினரின் மரபணு ஒட்டிக் கொண்டதா?: திருமாவளவனுக்கு அ.தி.மு.க., கேள்வி
தி.மு.க.,வினரின் மரபணு ஒட்டிக் கொண்டதா?: திருமாவளவனுக்கு அ.தி.மு.க., கேள்வி
ADDED : அக் 09, 2025 01:40 AM

சென்னை: 'வன்முறையை ரசிக்கும் அளவுக்கு, தி.மு.க.,வினரின் டி.என்.ஏ., ஒட்டிக் கொண்டதா' என, வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு, அ.தி.மு.க., கண்டனம் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க., வெளியிட்ட அறிக்கை:
திருமாவளவன் பயணம் செய்த கார், ஒரு ஸ்கூட்டரில் இடித்துள்ளது. ஒரு தலைவராக, தன் ஓட்டுநரை அனுப்பி, ஸ்கூட்டரை ஓட்டி வந்தவரின் நலனை உறுதி செய்திருக்க வேண்டும். ஒரு காலத்தில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தன்மையான குணம் படைத்த திருமாவளவன், அப்படி செய்திருப்பார்.
ஆனால், இப்போது தி.மு.க., கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், குண்டர்களை ஏவி விட்டுள்ளார்.
அவர்கள், ஸ்கூட்டரில் வந்தவரை தாக்கியுள்ளனர். உயர் நீதிமன்ற வாசலிலேயே, ரவுடியிசம் நடத்தும் தைரியம் வி.சி., கட்சியினருக்கு எங்கிருந்து வந்தது? தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், அவர்களின் டி.என்.ஏ., மரபணு இவர்களுக்கும் ஒட்டிக் கொண்டதா?
தன் கட்சியினரின் வன்முறையை கொஞ்சம் கூட, தடுக்காத திருமாவளவன், காரை விட்டே வெளியே வராமல், உள்ளே அமர்ந்து ரசித்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க வேண்டியவர் கூட, ஆதிக்க மனப்பான்மையோடு தான் செயல்படுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்காக திருமாவளவன் பேசுகிறார். அவரது கட்சியினரின் இந்த வன்முறையை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி துளி அளவாவது ஏற்பாரா? தி.மு.க., ஆட்சியின் சட்டம் -- ஒழுங்கு லட்சணத்திற்கு திருமாவளவனும், வி.சி., தொண்டர்களுமே சாட்சி ஆகி விட்டனர். இந்த அதிகார மமதை எல்லாம், இன்னும் ஏழு மாதங்கள் தான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.