மோசடி நபர்களின் தில்லாலங்கடி 'டிஜிட்டல் கைது': அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி
மோசடி நபர்களின் தில்லாலங்கடி 'டிஜிட்டல் கைது': அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி
ADDED : டிச 27, 2024 05:21 AM

மதுரை : 'உங்கள் பெயரில் அனுப்பப்பட்ட பார்சலில் போதைப்பொருள் உள்ளது. உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளோம். வீடியோ காலில் தொடர்ந்து இருங்கள். பணம் அனுப்பினால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்' எனக்கூறி லட்சக்கணக்கான ரூபாய்களை ஒரே மூச்சில் சுருட்டி விடுவார்கள். இதுபோன்ற ஆன்லைன் மோசடி சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் 2023 -24ல் மொத்தம் ரூ.177 கோடி மோசடி தொடர்பாக 31 லட்சம் சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நமது கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்., கார்டு மற்றும் ஆன்லைன் மூலமும் இக்குற்றங்கள் நடந்து வருகின்றன. நமக்கு தெரியாமல் நமது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுபோனால் அதற்கு சம்பந்தப்பட்ட வங்கியே பொறுப்பு. அதேசமயம் ஓ.டி.பி., அல்லது ஏ.டி.எம்., பின் நம்பரை பயந்தோ, பதட்டத்திலோ நாம் கூறி அதன்மூலம் பணம் திருடுபோனால் அதற்கு வங்கி பொறுப்பு ஆகாது.
போலீசார் கூறியதாவது: தற்போதைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல வழிகளிலும் ஆன்லைன் மோசடி நடந்து வருகிறது. அதுகுறித்து 'அப்டேட்' நமக்கு தெரியாவிட்டால் நாமும் ஏமாந்தவர்களின் பட்டியலில் சேர்ந்துவிடுவோம். நமக்கு 'அன் நோன்' நம்பர், வீடியோ கால் வந்தால் அதை கண்டுகொள்ளக்கூடாது. நாம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி அதை உறுதி செய்வது போல் நமது ஆதார் எண், அலைபேசி எண்ணை கூறி பதட்டத்தை ஏற்படுத்துவர். வீடியோ காலில் வரவழைத்து அமலாக்கத்துறை அல்லது போலீஸ் அலுவலக பின்னணியில் இருந்து பேசுவது போல் நம்ப வைப்பார்கள்.
நமது பயம், பதட்டத்தை சாதகமாக பயன்படுத்தி, 'பேச்சுவார்த்தை' நடத்தி பணத்தை அனுப்ப சொல்வார்கள். பணம் அனுப்பிய மறுநொடியே அவர்கள் பேசிய அலைபேசி எண்ணை 'சுவிட்ச் ஆப்' செய்துவிடுவார்கள். பணம் யாருக்கு சென்றது என்பதையும் உடனடியாக அறிய முடியாது. ஒருவேளை உண்மையிலேயே நீங்கள் குற்றம் செய்தவராக இருந்தால் முறையாக சம்மன் அனுப்பியோ, அல்லது வீடு தேடி வந்தோ போலீசார் விசாரித்து செல்வர்.
இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவதற்காகவே பயன்படுத்தப்பட்ட அலைபேசிகள், திருடப்பட்ட அலைபேசிகள், நாம் எங்கேயாவது கொடுத்த நமது ஆதார் எண், போன் எண்ணை பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் கைது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. இந்திய தண்டனை சட்டத்திலும் அதற்கு இடமில்லை. எனவே அதுபோன்று மிரட்டுபவர்கள் குறித்து உடனடியாக சைபர் கிரைமிற்கு 1930 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு கூறினர்.