'டிஜிட்டல்' முறையில் பயிர் கணக்கெடுப்பு: உணவு, பயணப்படி நிர்ணயிப்பதில் குழப்பம்
'டிஜிட்டல்' முறையில் பயிர் கணக்கெடுப்பு: உணவு, பயணப்படி நிர்ணயிப்பதில் குழப்பம்
ADDED : நவ 16, 2024 12:48 AM

சென்னை: 'டிஜிட்டல்' முறையில் பயிர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு, உணவு, பயணப்படி நிர்ணயம் செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.
நாடு முழுதும் 'டிஜிட்டல்' முறையில் பயிர் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் இப்பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு 120 கோடி ரூபாய் ஒதுக்கியதாக தகவல் வெளியானது.
தமிழகத்தில் இப்பணி, வி.ஏ.ஓ.,க்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மதிப்பூதியம் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அதை வருவாய் துறை நிறைவேற்றாததால், வி.ஏ.ஓ.,க்கள் சர்வே பணியை புறக்கணித்தனர்.
அதைத் தொடர்ந்து, வேளாண் கல்லுாரி மாணவர்களை வைத்து, கணக்கெடுப்பு பணியை, அரசு துவக்கி உள்ளது. வயல்களில் தேள், பாம்புக்கடி, கல்குவாரி கும்பலிடம் அடி என மாணவர்கள், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
அரசுக்கு நெருக்கடி
இப்பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு, ஊதியம், உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. கலெக்டர்களுக்கு, இது தொடர்பாக அறிவுறுத்தல் எதுவும் அரசு தரப்பில் வழங்கப்படவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் கணக்கெடுப்பிற்கு சென்ற மாணவர்கள், தங்குமிடமின்றி தவிப்பதை அறிந்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தன் திருமண மண்டபத்தில் தங்க அனுமதித்துள்ளார். உணவும் ஏற்பாடு செய்து தந்துள்ளார்.
மாணவர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்படுவதற்கு, அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பயிர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் மாணவர்கள், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்களுக்கு, உணவு, பயணப்படி, தங்கும் செலவு உள்ளிட்டவை வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக ஒவ்வொரு நபருக்கும், எவ்வளவு தேவைப்படும் என்ற விபரங்களை அனுப்பும்படி, வேளாண்மை துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக முடிவு செய்வதற்காக, நேற்று காலை 11:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை, தலைமைச் செயலகத்தில் வேளாண் துறை செயலர் அபூர்வா, டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கண்காணிப்பு அதிகாரியான, வேளாண் துறை இயக்குனர் முருகேஷ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
'வீடியோ கான்பரன்ஸ்'
மாவட்ட அதிகாரிகளுடன், நேற்று மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, சேப்பாக்கம் வேளாண் துறை அலுவலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடந்தது. இதில், எந்த முடிவும் எட்டப்படவில்லை.
முறையான திட்டமிடல் இல்லாமல், 'டிஜிட்டல்' பயிர் கணக்கெடுப்பு பணியில் வேளாண்துறை ஈடுபட்டு வருவது, அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.