ADDED : ஆக 25, 2024 03:48 AM

நவராத்திரி சமயத்தில், மேற்கு வங்கத்தில் ஒன்பது நாட்களும் காளிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.
இந்த மாநிலத்தின் ஒவ்வொரு நகரிலும், கிராமத்திலும் பெரிய பந்தல் அமைத்து, காளி தேவி சிலையை வைத்து பூஜை செய்வர்; நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அன்னதானம் நடக்கும்.
மேற்கு வங்க கிராமிய நடனங்கள் நடைபெறும். கோல்கட்டாவின் ஒவ்வொரு பகுதியிலும், ஒரு முக்கிய இடத்தில் பெரிய பந்தல் அமைப்பர்.
அந்த சமயத்தில், என்ன விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறதோ, அதை பந்தலின், 'தீம்' ஆக வைத்து விடுவர்.
சமீபத்தில், கோல்கட்டா மருத்துவமனையில், ஒரு இளம் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுதும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க, உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த முறை கோல்கட்டாவின் பூஜா பந்தல்களில், இளம் மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பந்தல்களில் தீம் அமைக்கப்பட உள்ளதாம்; இது, மம்தா கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
'இந்த முறை பந்தல் அமைக்க அரசு தரப்பிலிருந்து, 75,000 ரூபாய் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ஆனால், 'எங்களுக்கு உங்கள் பணம் வேண்டாம்' என, பூஜா பந்தல் நடத்துவோர் மறுத்து விட்டனராம்.
அனைத்து அரசியல் கட்சியினரும், இந்த விஷயத்தில் மம்தாவிற்கு எதிராக உள்ள நிலையில், 'நவராத்திரி சமயத்தில், பந்தல் தீம் விவகாரமும் தங்களுக்கு எதிராக உள்ளதே' என, மம்தா அதிர்ந்து போயுள்ளாராம்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, மேற்கு வங்க ஹிந்துக்களை ஒன்றிணைக்க, பா.ஜ., முயன்று வருகிறதாம்.