ADDED : செப் 22, 2024 03:42 AM

புதுடில்லி: டில்லியின் முதல்வராக பதவியேற்றுள்ள ஆதிஷியின் முழுப்பெயர், -ஆதிஷி மர்லேனா சிங். இவருடைய பெற்றோர், டில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள்.
'ஆம் ஆத்மி கட்சியில், எத்தனையோ பேர் தகுதியானவர்களாக இருக்க, எப்படி இவர் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமே நடந்தது. 'சஞ்சய் சிங், ராகுல் சட்டா, சவுரவ் பரத்வாஜ் போன்ற சீனியர் அமைச்சர்களில் ஒருவர் முதல்வராக வருவார்' என கட்சிக்குள் முதலில் சொல்லப்பட்டது.
ஆனால், கெஜ்ரிவாலோ ஆதிஷியைத் தான் தேர்ந்தெடுத்தார். இதற்கு, பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது, கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவின் விருப்பம். 'நாம் சொல்வதைக் கேட்பார்; பதவி விலகு என்றால், உடனே முதல்வர் நாற்காலியைக் காலி செய்து விடுவார். மற்ற தலைவர்கள் குறித்து சொல்ல முடியாது. அவர்கள் முதல்வரானால், உங்களுக்கு வேட்டு வைக்கவும் வாய்ப்புகள் உள்ளன...' என்று, அவர் கணவருக்கு, 'அட்வைஸ்' தந்துள்ளதாக, டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதனால், மதுபான லைசென்ஸ் ஊழல் வழக்கில் சிக்கி ஜாமினில் வெளியே வந்துள்ள கெஜ்ரிவால், மனைவியின் அறிவுரையை ஏற்று ஆதிஷியை முதல்வராக்கி விட்டார்.
'பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு துணைபோன குடும்பம் ஆதிஷியுடையது. பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் கைதான, தீவிரவாதி அப்சல் குருவைக் காப்பாற்ற, அனைத்து முயற்சிகளையும் எடுத்தவர்கள் ஆதிஷியின் குடும்பத்தினர்.
'தேசத்திற்கு எதிரானவர் டில்லி முதல்வராகி உள்ளார். இவர் ஒரு, 'டம்மி' முதல்வர்' என கடுமையாக எதிர்த்துள்ளார், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஸ்வாதி மலிவால்.