தி.மு.க.,வுக்கு முரசொலி போல பா.ஜ.,வுக்கு தினமலர்: இ.பி.எஸ்., ஒப்பீடு
தி.மு.க.,வுக்கு முரசொலி போல பா.ஜ.,வுக்கு தினமலர்: இ.பி.எஸ்., ஒப்பீடு
UPDATED : பிப் 16, 2024 05:13 AM
ADDED : பிப் 15, 2024 10:51 PM

சென்னை:''தினமலர் நாளிதழில், தி.மு.க., - அ.தி.மு.க., ஒன்றாகின என, தோளில் கைபோட்டு செல்வது போல படம் போட்டுள்ளனர். உங்களுக்கு பத்திரிகை விற்க நாங்கள் தான் கிடைத்தோமா? தி.மு.க., ஒரு தீய சக்தி என்று தான், எம்.ஜி.ஆர்., கட்சி துவக்கினார். அதிலிருந்து, எங்களுக்கு எதிரி தி.மு.க., தான்; மற்ற எந்த கட்சியும் கிடையாது.
தி.மு.க.,வுக்கு முரசொலி போல, பா.ஜ.,வின் முரசொலியாக, 'தினமலர்' காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. நடுநிலையோடு பத்திரிகைகளை வெளியிட வேண்டும்,'' என, அ.தி.மு.க., பழனிசாமி பேட்டி அளித்தார்.
சட்டசபை வளாகத்தில் அவர் அளித்த பேட்டி:
சட்டசபையில், அ.தி.மு.க., சார்பில், பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தேன். அவற்றுக்கு முதல்வர் பதிலுரையில், எந்த பதிலும் கிடைக்கவில்லை. தி.மு.க., அரசு அமைந்து, 33 மாதங்களாகிறது. இந்த காலகட்டத்தில், பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தனர்.
52 குழுக்கள்
பிரச்னை ஏற்படும்போது, அதற்கு குழு போட்டனர். இதுவரை, 52 குழுக்கள் போடப்பட்டுள்ளன.
ஆட்சி பொறுப்பேற்ற பின், எத்தனை குழுக்கள் போடப்பட்டன; எத்தனை குழுக்கள் அரசுக்கு அறிக்கை அளித்துள்ளன; அதன் மீது எத்தனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, வெள்ளை அறிக்கை வெளியிட கோரினேன்; முதல்வர் பதில் அளிக்கவில்லை.
உலக முதலீட்டாளர்கள் பட்டியலில், எவ்வளவு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டன; எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்ற விபரம் கேட்டேன். அதுவும் தெரிவிக்கவில்லை.
'மிக்ஜாம்' புயலின் போது, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், பொதுமக்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. அதற்காக செலவழித்த தொகை விபரம் கேட்டேன்; பதில் இல்லை.
தென் மாவட்டங்களில் கனமழை பொழிந்தபோது, கடும் சேதம் ஏற்பட்டது. எவ்வளவு செலவு அரசு வழியே செலவிடப்பட்டது என்ற விபரம் கேட்டேன்; தெரிவிக்கவில்லை.
தேர்தல் அறிக்கையில், 11.7 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம் சாகுபடிக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருந்தனர். இதுவரை எவ்வளவு நிலம் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டது என்று கேட்டேன்; அதற்கும் பதில் இல்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடியை, பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ப்போம். தி.மு.க., ஆட்சியில் காப்பீடு திட்டத்தில் சேர்க்காததால், குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் இழப்பீடு பெற முடியவில்லை.
ஒரு ஹெக்டேருக்கு 84,000 ரூபாய் இழப்பீடு கிடைத்திருக்கும். அதை அரசு வழங்க வேண்டும். மழை, நிலத்தடி நீரை நம்பி சம்பா தாளடி பயிர் சாகுபடி செய்தனர். அதற்கும் உரிய தண்ணீர் வழங்காததால் பயிர்கள் வாடிக் கொண்டிருக்கின்றன.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 560 அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில், 10 சதவீதம் நிறைவேற்றப்பட்டது. மீதி, 90 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்ற முடியாத அறிவிப்பை, சட்டசபை பொது தேர்தலின் போது, மக்களை கவரும் வகையில் வெளியிட்டனர்.
நிறைவேற்றப்படாத அறிவிப்புகள், உணவுப் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, நுாறு நாள் வேலை உறுதி திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும். கரும்புக்கு டன்னுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என கூறியது நிறைவேற்றப்படவில்லை.
நிறைவேற்றவில்லை
'நீட்' தேர்வு ரத்து, மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு, ரேஷன் கடைகளில் மாதந்தோறும் 1 கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தனர்; அவற்றையும் நிறைவேற்றவில்லை.
படிக்காதவர்கள் மட்டுமின்றி, படித்தவர்களையும் தி.மு.க., அரசு ஏமாற்றுகிறது. சொத்து வரி அதிகரிக்கப்படாது என்று கூறிவிட்டு, வீட்டு வரி, மின் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி விட்டனர். காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்புகளையும் நிறைவேற்றவில்லை.
நான் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பவில்லை. சில நேரங்களில் எடிட் செய்து வழங்குவர்; அதையும் வழங்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை கைது செய்தனர். அதை, முதல்வர் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களில், பார்வையற்றவர்களுக்கு பணி நியமனம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு பதில் அளிக்காமல், அமைச்சர் வேறு எதற்கோ பதில் அளித்தார். அ.தி.மு.க., ஆட்சியில், மக்களை கடனாளியாக்கி விட்டதாக கூறினர்.
ஆட்சி வந்த இரண்டு ஆண்டுகளில், 2.47 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். எந்த திட்டத்தையும் மக்களுக்கு கொண்டு வரவில்லை.
மாணவர்களுக்கு 'லேப்டாப், தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக்' என, அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி விட்டனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஒரு பெரிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப்பணி விபரம் கேட்டேன். அதை தெரிவிக்கவில்லை. பிரச்னையை சுட்டிக் காட்டினால், பதில் இல்லை. பிரச்னைகளை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை.
அ.தி.மு.க., ஆட்சியின் போது, காவிரி பிரச்னையில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த, எங்கள் எம்.பி.,க்கள் 22 நாட்கள், பார்லிமென்டை ஒத்திவைக்கச் செய்தனர்.
தி.மு.க., ஏதாவது செய்ததா? நிதியை கேட்க வேண்டிய இடத்தில் கேட்க வேண்டும். எம்.பி.,க்களை வைத்து பார்லிமென்டில் நிதி கேட்கலாம். 'இண்டியா' கூட்டணி கட்சிகளையும் சேர்த்து கேட்கலாம்; ஆனால், கேட்க மறுக்கின்றனர்.
பணம் வரவில்லை
தேர்தல் பத்திரங்கள் வழியே, எங்கள் கட்சிக்கு பணம் எதுவும் வரவில்லை. இது தொடர்பாக முழு விபரம் கிடைத்ததும் தெரிவிக்கிறேன். பணம் வாங்காத கட்சி அ.தி.மு.க., மட்டும் தான்.
'தினமலர்' நாளிதழ் பத்திரிகையில், தி.மு.க., - அ.தி.மு.க., ஒன்றாகின என, தோளில் கை போட்டு செல்வது போல படம் போட்டுள்ளனர். உங்களுக்கு பத்திரிகை விற்க, நாங்கள் தான் கிடைத்தோமா? பத்திரிகையாளர்கள், தர்ம நீதியாக செய்திகளை வெளியிட வேண்டும்.
எம்.ஜி.ஆர்., கட்சியை துவக்கிய போதே, 'தி.மு.க., ஒரு தீய சக்தி' என்று தான் துவக்கினார். அதிலிருந்து, எங்களுக்கு எதிரி தி.மு.க., தான்; மற்ற எந்த கட்சியும் கிடையாது; அதன் அடிப்படையில் தான் நாங்கள் செயல்படுகிறோம்.
வேண்டுமென்று திட்டமிட்டு எங்களை கொச்சைப்படுத்தி, தரம் தாழ்த்தி செய்தி வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தி.மு.க.,வுக்கு 'முரசொலி' போல, பா.ஜ.,வின் முரசொலி போல, 'தினமலர்' காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
எங்களுக்கு எஜமானர்கள் தமிழக மக்கள். அவர்கள் தான் எங்களுக்கு ஓட்டளிக்கின்றனர். அவர்கள் குரல் பார்லிமென்டில் ஒலிக்க, கட்சி நடத்துகிறோம். பதவிக்காக நாங்கள் அடிமையாக இருந்ததில்லை. மக்களுக்கு சேவை செய்வது தான் எங்கள் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.