திண்டுக்கல் பூட்டு உற்பத்தி தொழிலுக்கு 'பூட்டு': சந்தைப்படுத்த தெரியாததால் முடங்கும் அவலம்
திண்டுக்கல் பூட்டு உற்பத்தி தொழிலுக்கு 'பூட்டு': சந்தைப்படுத்த தெரியாததால் முடங்கும் அவலம்
ADDED : ஜன 13, 2025 06:45 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் என்றால் பூட்டு தான் பேமஸ். இங்கு தயாரிக்கப்படும் பூட்டுக்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
பழனி, திருச்செந்துார், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் பூட்டுகள் தான் வாசல் கதவுகளை அலங்கரிக்கின்றன. ஒரு கட்டத்தில் திண்டுக்கல் பூட்டுக்கு தனி புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது.
அப்படிப்பட்ட, 800 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த பூட்டுக்களை செய்வதற்கு கூட தற்போது ஆள் இல்லை. பூட்டு உற்பத்தி தொழிலே அழியும் தருவாயில் உள்ளது. திண்டுக்கல், நத்தம் ரோட்டில் ஆர்.எம்.டி.சி.காலனியில் உள்ள பூட்டு தொழிற்கூடத்தில் பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாராகும் பூட்டுக்களை தான் எல்லோரும் வாங்கிச் செல்கின்றனர்.
ஸ்டேரிங்க், இரும்புபெட்டி பூட்டு, மணி பூட்டு, மாஸ்டர் லாக், இரட்டை தாள், நான்குசாவி பூட்டு, முள்ளொத்து பூட்டு, 8,10,15 இன்ச் தொட்டி பூட்டு, 3,4,6,8,12 இன்ச் மாங்காய் பூட்டு என, 120க்கு மேலான பூட்டு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
கோவில்களுக்கு, 25 கிலோ எடைக்கும் மேல் பெரிய வகையிலான பூட்டுக்களும் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. 40 ஆண்டுகளுக்கு முன், 500க்கும் மேற்பட்ட பூட்டு தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது, 50க்கும் குறைவானர்களே உள்ளனர். இவர்களால் வேறு தொழிலில் ஈடுபட முடியாததால், இந்த தொழிலை தொடர்கின்றனர்.
படிப்பறிவு குறைந்தளவில் உள்ள பூட்டு தொழிலாளர்களுக்கு, பூட்டுக்களை சந்தைப்படுத்த தெரியாததால், தொழிலை மேம்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். புதிதாக யாரும் இத்தொழிலை பழகவும் முன்வருவதில்லை.
திண்டுக்கல் பூட்டு தொழிலாளி முருகேசன் கூறியதாவது: என் 10 வயதிலிருந்து, 50 ஆண்களுக்கு மேலாக பரம்பரையாக தொழிலில் ஈடுபடுகிறேன். முன்பு ஏராளமானோர் திண்டுக்கல் பூட்டை தேடி வருவர். தெருவுக்கு ஓர் பூட்டு தொழிலாளி இருப்பார்.
தற்போது தொழில் நலிவடைந்ததால் சிலர் வேறு தொழிலை தேடி சென்று விட்டனர். ஒரு பூட்டை தயாரிக்க குறைந்தது மூன்று நாட்களாகிறது. நான் தயாரித்த பூட்டுக்கள் திருப்பதி, பழனி முருகன் உள்ளிட்ட பல கோவில்களில் இன்றும் உள்ளது. திண்டுக்கல் பூட்டு தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு போதிய கல்வி அறிவு இல்லை. இதனால் உலக தரம் வாய்ந்த பூட்டுக்களை சந்தைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது.
இத்தொழிலை மீட்டெடுக்க அரசு தொழில்நுட்ப கல்லுாரிகளில் திண்டுக்கல் பூட்டு தயாரிக்கும் வழிமுறைகளை தொழில் கல்வி பாடமாக கொண்டு வர வேண்டும். இதனால் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.