பல பதவிகளில் கோலோச்சுபவர்களுக்கே சொத்து பாதுகாப்பு குழுவிலும் பொறுப்புகளா? தமிழக காங்.,ல் கொந்தளிப்பு
பல பதவிகளில் கோலோச்சுபவர்களுக்கே சொத்து பாதுகாப்பு குழுவிலும் பொறுப்புகளா? தமிழக காங்.,ல் கொந்தளிப்பு
UPDATED : மே 02, 2025 06:06 AM
ADDED : மே 02, 2025 05:00 AM

மதுரை: தமிழக காங்கிரசில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளை வைத்திருக்கும் தலைவர்களே, சொத்து பாதுகாப்பு மீட்புக் குழுவிலும் பொறுப்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர். மாவட்ட தலைவர்களில் பலர் சீனியர்களாக இருந்தும், அவர்களை புறக்கணித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்., பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஒப்புதலுடன், தமிழ்நாடு காங்., சொத்து பாதுகாப்பு மீட்புக் குழுவை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். குழு தலைவராக முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு இடம் பெற்றுள்ளார்.
இணை தலைவர்களாக முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரியும், சீனியர்களில் சுதர்சன நாச்சியப்பன், செல்லக்குமார், கே.ஆர்.ராமசாமி, எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், கோபிநாத், எம்.எல்.ஏ.,க்கள் ராஜேஷ் குமார், ரூபி மனோகரன், தாரகை கத்பர்ட், அசன் மவுலானா உட்பட 31 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் தவிர, கண்காணிப்பு குழுவில் சொர்ணா சேதுராமன், வழக்கறிஞர்கள் டி.செல்லம், அருள் பெத்தையா, ராம் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதேநேரம், தமிழகம் முழுதும் பல முக்கிய மாவட்டங்களிலும், இக்கட்சிக்கு சொத்துக்கள் உள்ளன. அவற்றை மீட்டெடுக்கும் எண்ணம் இருந்தால், இக்குழுவில் மாவட்ட தலைவர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அதை செய்யாமல், எந்த நோக்கத்துக்காக இந்தக் குழு இப்போது அமைக்கப்பட்டிருக்கிறது என, மாவட்ட தலைவர்களில் சீனியர்களாக இருப்போர் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
காங்., மாவட்ட தலைவர்கள் கூறியதாவது: தமிழக காங்.,கின் சொத்து பாதுகாப்பு மீட்புக் குழுவில் இடம் பெற்றுள்ள 90 சதவீதம் பேர் மூன்று, நான்கு பொறுப்புகளில் உள்ளனர். அவர்களுக்கே மீண்டும் பொறுப்புகளை கூடுதலாக வழங்கியிருப்பது சரியல்ல.
தமிழக முழுதும் கட்சிக்கு மாவட்டங்களில் ஏராளமான சொத்துக்கள் இருக்கும் நிலையில், அவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்றால், 72 மாவட்ட தலைவர்களில் சிறப்பாக செயல்படும் சிலரையாவது, சொத்து பாதுகாப்புக் குழுவில் நியமித்திருக்கலாம். காங்., வளர்ச்சி என்பது, மாவட்ட தலைவர்கள் கையில் தான் உள்ளது. ஆனால், அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக தலைமை வரை சென்று புகார் சொன்னவர்களாகப் பார்த்து, குழுவில் நியமித்துள்ளார் அவர். அதாவது, தனக்கு எதிரானவர்களுக்கு பதவி கொடுத்து சமாதானம் செய்ய முயன்றுள்ளார் செல்வப்பெருந்தகை.
கட்சியில் இருந்து பிரிந்து சென்று, புதிய கட்சி துவங்கியவர்கள் ஆதிக்கம், காங்., சொத்துக்கள் மீது இன்றும் உள்ளது. தற்போது சொத்து பாதுகாப்புக் குழுவில் இருப்போர் பலர், புதிய கட்சி துவங்கியோரிடம் இன்றும் தொடர்பில் உள்ளனர். அப்படி இருக்கும்போது, புதிதாக நியமிக்கப்பட்டிருப்போரால் எப்படி காங்., சொத்துக்களை மீட்க முடியும்? இவ்வாறு அவர்கள் கூறினர்.