மீண்டும் பதவியை பிடிக்க டில்லியில் முகாம்; காங்கிரசில் மாவட்ட தலைவர்கள் தீவிரம்
மீண்டும் பதவியை பிடிக்க டில்லியில் முகாம்; காங்கிரசில் மாவட்ட தலைவர்கள் தீவிரம்
ADDED : டிச 11, 2025 06:02 AM

தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர் பதவிக்கு, ஏராளமானோர் மனு அளித்துள்ளதால், 'சிட்டிங்' மாவட்ட தலைவர்கள், தங்கள் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக, ஆதரவாளர்களுடன் டில்லியில் முகாமிட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸில் புதிய மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் கட்சியின் வேறு மாநிலங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர், கடந்த, 2 முதல், 4ம் தேதி வரை, கட்சியின் 77 மாவட்டங்களுக்கும், சட்டசபை தொகுதிவாரியாக சென்று, தற்போதைய தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட, வட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்டனர்.
மேலும், புதிய மாவட்ட தலைவர் பதவிக்கு விருப்ப மனுக்களும் பெற்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், 20 முதல் 30 பேர் வரை, தலைவர் பதவி கேட்டு மனு அளித்துள்ளனர். குறிப்பாக பெண்களும், மாவட்டத் தலைவர் பதவி கேட்டு விருப்ப மனு வழங்கியுள்ளனர். இவற்றை பெற்றுக்கொண்ட பொறுப்பாளர்கள், ஆறு பேர் கொண்ட பட்டியலை தயாரித்து, அகில இந்திய தலைமைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோஷ்டி பிரச்னை
இதனால் அதிர்ச்சியில் இருக்கும் 'சிட்டிங்' மாவட்ட தலைவர்கள், தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, முன்னாள், இந்நாள் மாநில தலைவர்கள், அகில இந்திய தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் தலைவர்களுடன் டில்லிக்குச் சென்றுள்ளனர்.
காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில், இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியில், மாநில தலைவரிடம் பட்டியல் பெற்று, அதிலிருந்து ஒருவரை மாவட்ட தலைவர்களாக நியமித்தனர். இதனால், காங்கிரஸ் கட்சியில் 'கோஷ்டி' பிரச்னை தொடர்ந்தது. உத்தரபிரதேசத்தில், மாவட்ட தலைவர் பதவிக்கு, மாவட்டம் மற்றும் சட்டசபை தொகுதிவாரியாக மனுக்கள் பெற்று, மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதே நடைமுறையை, தமிழகம் உள்பட பிற மாநிலங்களிலும் பின்பற்றி, கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. அண்மையில் கோவையில், நேர்காணல் நடத்தப்பட்டு, அங்குள்ள கட்சியின் மூன்று மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது, தமிழகத்தில் 9 மாவட்டங்களில், தலைவர் பதவி காலியாக உள்ளது.
கோவை தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களில், விருப்ப மனு பெற்று, நேர்க்காணல் நடத்தி, 6 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாவட்ட தலைவர்கள் வாயிலாக, மாநில தலைவரை தேர்வு செய்யவும், காங்கிரஸ் தேசிய தலைமை முடிவு செய்துள்ளது.
திட்டம்
தமிழகத்தில், 2026 சட்ட சபை தேர்தலில், தி.மு.க.,வோ த.வெ.க.,வோ கூட்டணியில், 50 'சீட்' வரை பெறும் திட்டத்தில் காங்கிரஸ் தலைமை உள்ளது. மாவட்ட தலைவருக்கு, தேர்தலில் போட்டியிட, 'சீட்' கிடைக்கும் என்பதால், 'சிட்டிங்' தலைவர்களும் புதிய தலைவராக விரும்புவோரும், எப்படியாவது மாவட்ட தலைவர் பதவியை பிடிக்க, டில்லியில் செல்வாக்குள்ள தமிழக காங்., தலைவர்களுடன் டில்லியில் முகாமிட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

