UPDATED : ஜன 05, 2024 06:47 AM
ADDED : ஜன 05, 2024 04:50 AM

பெங்களூரு : ஜாதிக்கு ஒரு துணை முதல்வர் பதவி கேட்பதால், கர்நாடகா காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக சிவகுமார் உள்ளார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு முதல்வர் மாற்றம் நடக்கும், சிவகுமார் முதல்வர் ஆவார் என்று, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும்; சித்தராமையாவே ஐந்து ஆண்டுகளும் முதல்வராக நீடிப்பார் என்று, அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களும் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர்.
கண்டிப்பு
ஒரு படி மேலே சென்று, சிவகுமாரை கட்டிப்போடும் வகையில், ஜாதிக்கு ஒருவருக்கு என, மூன்று பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என, சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்கள் மஹாதேவப்பா, சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா ஆகியோர், இரண்டு மாதங்களுக்கு முன்பு கொளுத்திப் போட்டனர். இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால், காங்கிரஸ் மேலிடம் கண்டித்தது.
பின்பற்றவில்லை
அதன்பின்னர், அமைதியாக இருந்த அமைச்சர்கள், தற்போது மீண்டும் துணை முதல்வர் பதவி விவகாரத்தை, கையில் எடுத்துள்ளனர்.
அமைச்சர் ராஜண்ணா பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் வகையில், ஜாதிக்கு ஒருவர் என மூன்று பேருக்கு, துணை முதல்வர் பதவி வழங்கினால் நல்லது. இதன் மூலம் கட்சிக்கு அனுகூலம் கிடைக்கும். இது எனது தனிப்பட்ட கருத்து. முடிவு எடுக்க வேண்டியது மேலிடம்.
சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தல்களில், பா.ஜ., மூன்று இடங்களில் வென்றது. அந்த மூன்று மாநிலங்களிலும், ஜாதி அடிப்படையில் தலா 2 துணை முதல்வர்கள், நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், லோக்சபா தேர்தலில் அதிக வெற்றி பெற முடியும் என்பது, பா.ஜ.,வின் கணக்கு. அவர்கள் பாணியை பின்பற்ற, நாங்கள் நினைக்கவில்லை. ஆனாலும் கர்நாடகாவிலும் கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க வேண்டியது, அவசியமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க, வழக்கம்போல் சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால், கர்நாடகா காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.