ராஜ்யசபா 'சீட்' கேட்டு தே.மு.தி.க., துாது; அ.தி.மு.க., தலைமை மவுனம்
ராஜ்யசபா 'சீட்' கேட்டு தே.மு.தி.க., துாது; அ.தி.மு.க., தலைமை மவுனம்
ADDED : மே 28, 2025 02:08 AM

சென்னை : ராஜ்யசபா 'சீட்' கேட்டு, தே.மு.தி.க., தரப்பில் துாது அனுப்பப்பட்ட நிலையில், அதை கண்டு கொள்ளாமல், அ.தி.மு.க., தலைமை மவுனம் காக்கிறது.
கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்றது. அக்கட்சி போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும், தோல்வியை தழுவியது. தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா எம்.பி., சீட் வழங்குவதாக, அ.தி.மு.க., தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது என, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கூறினர்.
ஆனால், அ.தி.மு.க., - தே.மு.தி.க., கட்சிகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்து, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஜூலை மாதம் காலியாக உள்ள, ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., கோட்டாவில், ராஜ்யசபா எம்.பி., பதவியை கைப்பற்ற, தே.மு.தி.க., தரப்பில் மீண்டும் துாது அனுப்பப்பட்டுள்ளது. அ.தி.மு.க., தலைமை அதை கண்டு கொள்ளாமல், மவுனம் காத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், பிரேமலதா நேற்று கூறியதாவது: முதல்வர் 'நிடி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க, டில்லி சென்று திரும்பி உள்ளார். அவரது பயணத்தால், தமிழக மக்களுக்கு நல்லது நடந்தால் வரவேற்கிறோம். அவர் எதற்காக சென்றார் என்பதை, அவர்தான் சொல்ல வேண்டும். அமலாக்கத் துறை சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
சோதனைக்கு பின் என்ன நடந்தது என்பதை, மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். ராஜ்யசபா தேர்தல் தேதி இப்போதுதான் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் நேரம் இருக்கிறது. பொறுமை கடலினும் பெரிது. இவ்வாறு அவர் கூறினார்.