தி.மு.க., - அ.தி.மு.க., ரகசிய வியூகம்: வளரும் பா.ஜ.,வை வீழ்த்தும் திட்டமா?
தி.மு.க., - அ.தி.மு.க., ரகசிய வியூகம்: வளரும் பா.ஜ.,வை வீழ்த்தும் திட்டமா?
ADDED : பிப் 15, 2024 12:40 AM

சென்னை: தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சியை தடுக்க தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ரகசிய வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, அ.தி.மு.க., பொதுசெயலராகி உள்ள பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை, முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு வழங்கினார். ஆனாலும், சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை பன்னீர்செல்வத்திற்கே வழங்கப்பட்டது. அதை உதயகுமாருக்கு ஒதுக்கக் கோரி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக அ.தி.மு.க., போராடியது.
இந்நிலையில் திடீரென, 'அ.தி.மு.க.,வின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேச, அடுத்த நாளே, உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்கப்பட்டது. இது, அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வின் இடத்தைப் பிடிக்க பா.ஜ., முயற்சிப்பதாக, தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி., உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றன.
தடுக்க வேண்டும்
கடந்த 2021ல் தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின், அ.தி.மு.க., - - பா.ஜ., உறவு மோசமடைந்தது கடந்த 2022 பிப்ரவரியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ., தனித்தே போட்டியிட்டது.
அதன்பிறகு, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, 'தி.மு.க., அரசை ஒரு கட்டத்திற்கு மேல் விமர்சிக்க முடியாது. உங்கள் இடத்திற்கு அதாவது ஆளுங்கட்சி வரிசைக்கு நாங்கள் வர வேண்டும். எதிர்க்கட்சி வரிசைக்கு நீங்கள் வர வேண்டும். வேறு சக்திகள் வருவதை தடுக்க வேண்டும்.
சொல்லப் போனால், நமக்குள் நடப்பதெல்லாம் பங்காளி சண்டைதான்' என்று சட்டசபையிலும், வெளியிலும் பேசினார்.
அதாவது, எக்காரணம் கொண்டும், இரு கட்சிகளுக்கும் இடையே பா.ஜ., வளர்ந்துவிடக் கூடாது என்பதுதான் அவருடைய பேச்சின் சாராம்சம்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், 'தமிழகத்தை தி.மு.க., ஆள வேண்டும் அல்லது அ.தி.மு.க., ஆள வேண்டும். மற்றவர்களை அனுமதிக்கக்கூடாது' என, சட்டசபையில் பேசினார்.
இந்நிலையில், தமிழக அரசியலில் இரண்டாவது இடத்தை, பா.ஜ., பிடித்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு விஷயங்களில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் இணைந்து செயல்படுவதாகவும், அதனால்தான் பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள், கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில், ஆரம்பத்தில் காட்டப்பட்ட வேகம் இப்போது இல்லை என்றும் கூறப்படுகிறது.
உக்கிரமான போராட்டம்
இது தொடர்பாக, அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டையும் எதிர்க்கும் சிலர் கூறியதாவது:
நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்னைகளில், அ.தி.மு.க., கேள்விகள் எழுப்ப, அதற்கு முதல்வர், அமைச்சர்கள் பதிலளித்தும், அ.தி.மு.க.,வினர் அமைதியாக அமர்ந்தும் விடுகின்றனர்.
அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., குறித்து, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் ஆ.ராஜா மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ஜெயலலிதா இருந்திருந்தால் ஆ.ராஜா மன்னிப்பு கேட்கும் வரை உக்கிரமாக போராட்டங்கள் நடந்திருக்கும்.
ஆனால், பெயரளவுக்கு ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டு, விஷயத்தை அப்படியே முடித்து விட்டார் பழனிசாமி.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

