அதிகாரிகளை பின்தொடர்ந்து செல்ல தி.மு.க., - அ.தி.மு.க., வலியுறுத்தல்
அதிகாரிகளை பின்தொடர்ந்து செல்ல தி.மு.க., - அ.தி.மு.க., வலியுறுத்தல்
ADDED : நவ 01, 2025 01:55 AM

-: வாக்காளர் திருத்தப் பணிக்காக, கள ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகளை பின் தொடர்ந்து சென்று கண்காணிக்க வேண்டும் என, கட்சியினருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலுாரில் உள்ள, அ.தி.மு.க., அலுவலகத்தில், நேற்று கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:
தமிழகத்தில், வாக்காளர் சிறப்பு திருத்தம் பணி துவங்கவுள்ளது. இரட்டை பதிவு, போலி வாக்காளர்கள், இறந்தோர் நீக்காமை உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து நீக்க, மிக கவனத்துடன் அ.தி.மு.க.,வினர் செயல்பட வேண்டும். வாக்காளர் திருத்தப் பணி ஆய்வுக்காக அதிகாரிகள் வீடு வீடாக செல்ல உள்ளனர்.
போலி வாக்காளர்கள் அவர்கள் அனைவரும், அரசு அதிகாரிகள் என்பதால், ஆளும்கட்சியினரின் அழுத்தத்தில் அவர்கள் செயல்படக் கூடும். அதனால், வாக்காளர் திருத்தப்பணி என்பது எவ்வளவு துாரம் துாய்மையாகவும், உண்மையாகவும் நடக்கும் என்பது தெரியாது.
தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில், ஏராளமான போலி வாக்காளர்களை, தி.மு.க., தரப்பு சேர்த்துள்ளது.
இருந்தபோதும், தேர்தல் ஆணையம் தரப்பில் மேற்கொள்ளவிருக்கும் வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதிகாரிகள் ஆய்வுக்குப் போகும்போது, இறந்தோர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமை, இரட்டை பதிவு, போலி வாக்காளர்கள் உள்ளிட்டவைகளை கண்டறிந்து, அதிகாரிகளுக்குச் சொல்லி, அவர்களை திருத்த வாக்காளர் பட்டியலில் நீக்க வலியுறுத்த வேண்டும்.
இந்த பணியில் நேர்மையாக செயல்படாத அதிகாரிகளையும் கண்டறிந்து, அவர்களை தப்பு தண்டா செய்ய விடாமல், உண்மையான வாக்காளர் பட்டியல் உருவாக்க, நம் சார்பிலும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அதற்கு, அ.தி.மு.க.,வினர் உதவிகரமாக இருந்து களப்பணியாற்ற வேண்டும். இதை ஒவ்வொரு அ.தி.மு.க.,வினரும் தங்கள் கடமையாக எடுத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
-நமது நிருபர்-
கண்காணிக்கும் பணி இதே போலவே, சமீபத்தில் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, வாக்காளர் திருத்தப் பணி குறித்து விவாதித்தார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின்.
அவர், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், ''பீஹாரில் வாக்காளர் திருத்தப் பணிகள் நடந்தபோது, அதை தங்களுக்கு முழு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பா.ஜ., வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, பா.ஜ.,வுக்கு பலம் சேர்க்கும் வகையில் செய்துள்ளனர். இதைத்தான், துவக்கத்தில் இருந்தே நாம் கண்டித்து வருகிறோம்.
தற்போது, தமிழகத்திலும் அப்பணிகள் துவங்க உள்ளன. தமிழக அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் அப்பணியை மேற்கொள்ள உள்ளனர் என்றாலும், இதில் தேர்தல் கமிஷன் அழுத்தங்கள் இருக்குமானால், பீஹாரில் நடந்தது போன்று தவறுகள் நடத்த வாய்ப்புள்ளது.
எனவே, வாக்காளர் திருத்தப் பட்டியல் தயாரிக்கும் பணிக்கான ஆய்வுக்காக, அதிகாரிகள் மக்களை நோக்கிச் செல்லும்போது, அவர்களை முழுமையாக கண்காணிக்கும் பணியில் தி.மு.க.,வினர் ஈடுபட வேண்டும்.
அதற்காக, அப்பணியை மேற்கொள்ளும் அதிகாரிகள் கூடவே, கட்சியினரும் செல்ல வேண்டும். தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கூட, புதிதாக தவறுதலாக சேர்த்துவிடக்கூடாது,'' என பேசியுள்ளார்.
இதேபோலவே, பா.ஜ., - காங்., - வி.சி., - த.வெ.க., கட்சியினரை, அந்தந்த கட்சித் தலைமைகள் முடுக்கி விட்டுள்ளன.

