UPDATED : ஜன 04, 2026 07:34 AM
ADDED : ஜன 04, 2026 04:02 AM

பா. ஜ.,வின் இளம் எம்.பி., பெங்களூரைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யா. இவருக்கு சமீபத்தில் திருமணமானது. பார்லி., குளிர்கால கூட்டத்தொடரின் போது, இந்த புது தம்பதிக்கு விருந்தளித்தார் மூத்த தலைவரான ஒரு தி.மு.க., - எம்.பி.,
சபையில் எப்போதும் தி.மு.க.,வை கடுமையாக விமர்சிப்பவர் சூர்யா. அவருக்கு தி.மு.க., - எம்.பி., விருந்து கொடுத்தது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பா.ஜ., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்களும் இதில் பங்கேற்றனர்.
விருந்திற்கு ஏற்பாடு செய்த அந்த தி.மு.க., - எம்.பி., மீது, கட்சி தலைமைக்கு எப்போதும் அதிக நம்பிக்கையும் மரியாதையும் உண்டு. இதனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கிட்டத்தட்ட, 60 தொகுதிகளை கவனிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாம்.
இவரிடம், பா.ஜ., - எம்.பி.,யும், முன்னாள் அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் நல்ல தொடர்பில் உள்ளார்; இருவரும் அடிக்கடி பேசிக்கொள்கின்றனர்.
தவிர, சபாநாயகர் ஓம் பிர்லாவும் இவருடன் நட்பில் உள்ளார். அத்துடன், சபாநாயகர் சபையில் இல்லாதபோது, அவருடைய நாற்காலியில் அமர்ந்து, அவையை கவனிக்க ஒரு குழு உண்டு. அதில் இந்த தி.மு.க., - எம்.பி.,யும் உள்ளார்.
விருந்தளித்த விஷயம், தி.மு.க., - எம்.பி.,க்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.,வில் மூத்த தலைவரான இந்த எம்.பி.,க்கு, பா.ஜ., துாண்டில் போடுகிறதா? 'சிவசேனாவை இரண்டாக உடைத்து பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த ஏக்நாத் ஷிண்டே போல், இவரும் அடுத்த ஏக்நாத் ஷிண்டேவாக மாற போகிறாரா' என, தி.மு.க., வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

