ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு: தி.மு.க., - காங்கிரஸ் தந்திரம்?
ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு: தி.மு.க., - காங்கிரஸ் தந்திரம்?
ADDED : செப் 27, 2024 04:58 AM

விஜயதசமியை ஒட்டி, நாடு முழுதும் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் சீருடை அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா என்பதால், தமிழகத்தில் 58 இடங்களில் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் அக்., 6ம் தேதி நடத்த, அந்தந்த மாவட்ட போலீசிடம் அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ்., விண்ணப்பித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும், தமிழக போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. அதனால் அனுமதி பெற, நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ்., நாடியுள்ளது.
தமிழக காவல் துறை அனுமதி மறுத்தபோதும், உச்ச நீதிமன்றம் வரை சென்று, கடந்த இரண்டு ஆண்டுகளும் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்தியது. அதனால், இந்த ஆண்டு அணிவகுப்புக்கு அனுமதி கொடுக்காமல் இருக்க, தி.மு.க., அரசு காய் நகர்த்தி வருவதாக,ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் கூறப்படுகிறது.
அணிவகுப்புக்கு ஆர்.எஸ்.எஸ்., அனுமதி கோரியுள்ள அதே அக்., 6-ல், காந்தி ஜெயந்தியையொட்டி மாவட்ட, வட்டார அளவில் பாதயாத்திரை நடத்த, காங்கிரஸ் சார்பில் அனுமதி கோர திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு தொலைபேசி வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு காங்கிரஸ் அனுமதி கேட்டால் சட்டம் -- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு, காங்கிரஸ் பாதயாத்திரை இரண்டுக்கும் அனுமதி மறுத்து விடலாம் என, தி.மு.க., திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

