தி.மு.க., - எம்.பி., ராஜா பேச்சு: ஹிந்து அமைப்புகள் கண்டனம்
தி.மு.க., - எம்.பி., ராஜா பேச்சு: ஹிந்து அமைப்புகள் கண்டனம்
ADDED : ஏப் 04, 2025 06:09 AM

மதுரை : நீலகிரியில் நடந்த தி.மு.க., மாணவரணி கூட்டத்தில், அக்கட்சியின் துணை பொதுச்செயலர் ராஜா, 'தி.மு.க., கரைவேட்டி கட்டும் கட்சியினர், பொட்டு வைப்பது, கயிறு கட்டுவது போன்ற ஆன்மிக அடையாளங்களை வெளிப்படுத்தக்கூடாது' என பேசியுள்ளார். இதற்கு, ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துணை பொதுச்செயலர் சந்திரசேகரன்:
ஹிந்து மதத்தை ராஜா தொடர்ந்து இழிவுபடுத்தி பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவருடைய நீலகிரி பேச்சு, தி.மு.க.,வில் உள்ள ஹிந்துக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அனைத்து மதத்தவருக்கும் பொதுவானவராக செயல்பட வேண்டிய முதல்வர், இதை கண்டிக்காதது ஏன்? அப்படியென்றால், ராஜா கருத்தை ஆதரிக்கிறாரா? பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை.
மத மாச்சரியத்தோடு நடந்து கொள்ளும் முதல்வர், ராஜா பேச்சுக்கு நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதே தவறு தான். மொத்த தி.மு.க.,வும் ஹிந்துக்களுக்கு விரோதமாகச் செயல்படுவது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன்:
தி.மு.க.,வில் இருக்கும் ஹிந்துக்கள் பொட்டு வைக்கக்கூடாது; கயிறு கட்டக்கூடாதென்று ராஜா பேசியுள்ளார்.
பொட்டு வைப்பவர்கள், கயிறு கட்டுவோர் ஓட்டுகள் எனக்கோ, தி.மு.க.,வுக்கோ தேவையில்லை என அவர் வெளிப்படையாக அறிவிப்பாரா?
தி.மு.க.,வில் இருக்கும் ஹிந்துக்களுக்கு உத்தரவு போடுவது போல கருத்து சொல்லியிருக்கும் ராஜா, மறைமுகமாக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருக்குத்தான் உத்தரவு போட்டுள்ளார்; அவர்களைத்தான் இழிவுபடுத்தி உள்ளார்.
ராஜா தன் கருத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், அவருக்கு எதிராக போராடுவோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

