மீண்டும் ஆட்சியில் பங்கு கோஷம்; வி.சி., மீது தி.மு.க., கோபம்
மீண்டும் ஆட்சியில் பங்கு கோஷம்; வி.சி., மீது தி.மு.க., கோபம்
UPDATED : ஏப் 17, 2025 04:18 AM
ADDED : ஏப் 16, 2025 09:00 PM

கரூர்:ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கரூரில் போஸ்டர்களை ஒட்டியுள்ளதால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்தாண்டு, தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கடந்த ஓராண்டு காலமாகவே, வி.சி.க.,வில், 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு' என்ற கோஷம் எழுப்பப்பட்டு வருகிறது. கூட்டணிக்கு பங்கமாக அமையும் என்பதால், கட்சியின் தலைவர் திருமாவளவன், இதை வலியுறுத்தாமல் அமைதியாக இருந்து வருகிறார்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கோஷத்தை வேகமாக எழுப்பிய கட்சியின் துணைப் பொதுச்செயலராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை, பதவியில் இருந்து நீக்கியதோடு, கட்சியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்தார் திருமாவளவன்.
இதையடுத்து, கட்சியில் இருந்து விலகி, தன்னுடைய கருத்தை உயர்த்திப் பேசும் த.வெ.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டார் ஆதவ் அர்ஜுனா.
இந்நிலையில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கடந்த 14ல், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வி.சி.க., உள்ளிட்ட அமைப்பினரும், அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடினர்.
அதையொட்டி, கரூர் அருகே திருமாநிலையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வி.சி.க., ஆதரவாளர்கள் சிலர், போஸ்டர் ஒட்டினர். அதில், 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால், தி.மு.க., தரப்பு கோபம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.