ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தி.மு.க., - பா.ஜ.,வினர் மிரட்டல்: த.வெ.க., குற்றச்சாட்டு
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தி.மு.க., - பா.ஜ.,வினர் மிரட்டல்: த.வெ.க., குற்றச்சாட்டு
ADDED : நவ 17, 2025 12:09 AM

சென்னை: ''பிழையற்ற வாக்காளர் பட்டியல் வெளியாவதை, தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும்,'' என, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் பேசினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு எதிராக, தமிழகம் முழுதும் த.வெ.க., சார்பில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆனந்த், த.வெ.க., தேர்தல் பிரசார பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஆனந்த் பேசியதாவது:
வாக்காளர் பட்டியலில் இருந்து, பெயர்கள் கொத்து கொத்தாக நீக்கப்படுவதாக, மக்கள் கூறுகின்றனர். இறந்து விட்டதாகவும், வீடு மாறி விட்டதாகவும் கூறி, பெயர்களை நீக்குவது அப்பட்டமான துஷ்பிரயோகம். அதே நேரத்தில், போலி வாக்காளர் பெயர்கள் சேர்க்கப்படுவதாக தகவல் வருகிறது.
யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை, மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஆளும் கட்சியினர் தீர்மானிக்கின்றனர். எனவே, வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மறு ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் அதிகாரிகள் சென்று மேற்பார்வையிட வேண்டும்.
ஓட்டுச்சாவடி அலுவலர்களை, தி.மு.க., - பா.ஜ.,வினர் மிரட்டுவதை கைவிட வேண்டும். பிழையற்ற வாக்காளர் பட்டியல் வெளியாவதை, தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆதவ் அர்ஜுனா பேசும்போது, “சட்டசபை கூட்டம் நடக்கும்போது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான தீர்மானத்தை, தி.மு.க., அரசு கொண்டுவரவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை, தமிழக அரசு சார்பாக நடத்தாமல், தி.மு.க., நடத்தியது. உண்மையான, வெளிப்படையான தேர்தல் நடந்தால், த.வெ.க., வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகம் முழுதும், 38 மாவட்டங்களில், ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில், மேடைக்கு அனுமதி, பாதுகாப்பு நடைமுறை என த.வெ.க., நிர்வாகிகளை கடைசி நிமிடம் வரை போலீசார் அலைய விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் போராட்டத்தில் பங்கேற்றோரை 10 கி.மீ., தொலைவு வரை போலீசார் சுற்ற விட்டனர்.
==
ஈ.டி., -- ஐ.டி., ரெய்டுகளில் அமைச்சர்கள் சிக்குவர் தமிழகத்தை ஆளும் உரிமை தி.மு.க.,வுக்கு மட்டுமே உள்ளது என, மன்னராட்சி போல நினைத்துக் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். வழக்கமான பணிகளுக்கு இடையே எஸ்.ஐ.ஆர்., பணியை அரசு ஊழியர்கள் செய்கின்றனர். ஆசிரியர்களை தி.மு.க., அரசு கொத்தடிமைகளாக பார்க்கிறது. எஸ்.ஐ.ஆர்., வாயிலாக, ஒரு கோடிக்கும் மேலானோர், ஓட்டுரிமையை இழப்பர். இளைஞர் ஓட்டுகளை குறி வைத்து, தமிழக அரசு நீக்குகிறது. தன் பெயரை சொல்லக் கூடாது என தடை உத்தரவு பெற்ற 10 ரூபாய் பாட்டில் கம்பெனிக்காரர் மற்றும் ஒவ்வொரு தி.மு.க., அமைச்சரும், எம்.எல்.ஏ.,க்களும் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்து வைத்துள்ளனர். மண், கல் குவாரி என இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. விரைவில், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டுகளில் தி.மு.க., அமைச்சர்கள் சிக்குவர். - நிர்மல் குமார், இணைச் செயலர், த.வெ.க.,

