தேர்தல் நிதி வசூலிக்க தி.மு.க., மும்முரம்: இலக்கு நிர்ணயத்தால் மா.செ.,க்கள் கலக்கம்
தேர்தல் நிதி வசூலிக்க தி.மு.க., மும்முரம்: இலக்கு நிர்ணயத்தால் மா.செ.,க்கள் கலக்கம்
ADDED : நவ 29, 2024 05:31 AM

மதுரை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தேர்தல் நிதி வசூலிக்க தி.மு.க., தரப்பில் மும்முரமாக களம் இறங்கி விட்டனர். இதையொட்டி இன்று, மாவட்டம் வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வசூல் இலக்கு எவ்வளவு என்ற விபரத்தை தெரிவிக்கும் சிறப்புக் கூட்டங்கள் நடக்கவுள்ளன.
கட்சி வளர்ச்சி, தேர்தல் செலவுக்காக அரசியல் கட்சிகள் மக்கள், நிறுவனம், தொழிலதிபர்களிடமிருந்து நிதி வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இதற்காக நிதி அளிப்போருக்கு கட்சி சார்பில் ரசீது வழங்கப்படும்.
ஆளும் கட்சியான தி.மு.க., வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க, 2016க்கு பின், இந்தாண்டு தேர்தல் நிதி வசூலிக்க களம் இறங்கியுள்ளது. இதற்காக மாவட்டச் செயலர்கள், ஒன்றியம், பகுதி, வட்டம், கவுன்சிலர் என பதவிக்கு ஏற்ப வசூல் இலக்கை கட்சி தலைமை நிர்ணயித்துள்ளது.
இதில் யாருக்கு என்ன இலக்கு என்பது குறித்து மாவட்டம் வாரியாக, இன்று நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில், மாவட்டச் செயலர்கள் அறிவிக்க உள்ளனர். இதற்காக மாவட்டம் தோறும் கட்சி சார்பில் சிறப்பு கூட்டம் கூட்ட, தலைமையிடம் இருந்து உத்தரவு சென்றுள்ளது.
முன்னதாக, நன்கொடைக்கான டிக்கெட்டுகளை பல மாவட்டங்களுக்கு கட்சி தலைமை அனுப்பி வைத்துள்ளது. சில மாவட்டங்களில் மாவட்டச் செயலரே அச்சடித்துள்ளனர். குறைந்தது 1 லட்சம் ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், கட்சியின் வட்டச் செயலர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை கலக்கம் அடைந்துள்ளனர்.
தி.மு.க.. நிர்வாகிகள் கூறியதாவது:
துணை முதல்வர் உதயநிதி கூறியது போல் வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க., இப்போதே தயாராகி விட்டது.
மத்தியில் பா.ஜ., எதிர்ப்பு, தமிழகத்தில் நடிகர் விஜய் வருகை, அண்ணாமலையின் தடாலடி அரசியல், அ.தி.மு.க., ஒன்றிணைந்து கூட்டணி பலமாக அமைந்தால் அதை சமாளிப்பது, வி.சி.க.,வின் திருமாவளவன் போன்றோர் ஆட்சியில் பங்கு கோஷம் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் தி.மு.க.,வுக்கு உள்ளன.
இவற்றையெல்லாம் பணத்தை வைத்து ஈடுகட்டலாம் என தி.மு.க., தலைமை முடிவெடுத்திருக்கிறது. அதனால், பொருளாதார ரீதியாக கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. அதையடுத்தே, தேர்தல் நிதி வசூலிக்க வேண்டிய கட்டாயம் கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், இது வரை நிதி வசூலிப்பில் தி.மு.க., தரப்பு ஈடுபடவில்லை. ஆனாலும், தேர்தல் நெருங்குவதால், 2016க்கு பின், தற்போது தேர்தலுக்காக நிதி வசூல் செய்யும் திட்டத்தை தி.மு.க., கையில் எடுத்துள்ளது.
இதன்படி 500, 1000, 10,000 ரூபாய் என நன்கொடை டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டச் செயலர்களுக்கு அனுப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.