9 'சீட்' தர தி.மு.க., உறுதி; 12 'சீட்' கேட்டு பிரேமலதா பிடிவாதம்
9 'சீட்' தர தி.மு.க., உறுதி; 12 'சீட்' கேட்டு பிரேமலதா பிடிவாதம்
ADDED : ஆக 05, 2025 04:04 AM

சென்னை: தி.மு.க., கூட்டணியில் ஒன்பது 'சீட்' வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட நிலையில், 12 சீட் கேட்டு, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அடம் பிடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் - வி.சி., - ம.தி.மு.க., - இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - ம.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளை கைப்பற்ற, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.
அதே நேரம், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பலமானால், தி.மு.க.,வின் வெற்றி இலக்கு குறைய வாய்ப்புள்ளது. இதை தடுக்க முடிவு செய்த தி.மு.க., தலைமை, கூட்டணிக்குள் மேலும் சில கட்சிகளை கொண்டு வர வியூகம் வகுத்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க.,வை இழுக்க பேச்சு நடக்கிறது. உடல்நலக் குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய முதல்வர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ் ஆகியோர் சமீபத்தில் சந்தித்தனர்.
இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என தே.மு.தி.க., விளக்கம் அளித்தது. ஆனால், இந்த சந்திப்பின் போது, கூட்டணி பேச்சு நடந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு ஒன்பது தொகுதிகள் வழங்க முதல்வர் ஸ்டாலின் முன் வந்துள்ளார்.
ஆனால், பிரேமலதா முதலில் 15 தொகுதிகள் கேட்டு, பின்னர் 12 தொகுதிகளுக்கு இறங்கி வந்துள்ளார். கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால், அவ்வளவு தொகுதிகள் ஒதுக்க இயலாது.
எனினும், உள்ளாட்சி தேர்தலில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை தருவதாக முதல்வர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், 12 தொகுதிகள் வேண்டும் என்பதில் பிரேமலதா பிடிவாதமாக இருந்ததால், அடுத்த சந்திப்பில் தொடர்ந்து பேசலாம் என கூறி, அவர்களை முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கிடையே, சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் துவக்கிய பிரேமலதா, 'தமிழகத்தில் போதை கலாசாரம், பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன' என பட்டியல் வாசித்துள்ளார். இது, தி.மு.க., தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தே.மு.தி.க.,வை தி.மு.க., கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்ட மூத்த அமைச்சர் ஒருவரை அழைத்து, முதல்வர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
உடனே, அந்த அமைச்சர், பிரேமலதாவை தொடர்பு கொண்டு, 'கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை, சற்று அடக்கி வாசியுங்கள்' என கூறி உள்ளார்.
இவ்வாறு தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்தன.