தொகுதி பங்கீடு முடிந்தும் தொடரும் தி.மு.க., - காங்., மோதல்
தொகுதி பங்கீடு முடிந்தும் தொடரும் தி.மு.க., - காங்., மோதல்
ADDED : மார் 11, 2026 06:06 AM

சென்னை: தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, தி.மு.க.,வுடனான மோதல் ஓயாத நிலையில், “நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை தயார் செய்தபின், தி.மு.க.,வுடன் பேச்சு நடத்துவோம்,” என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சில், நீண்ட இழுபறிக்கு பின், காங்கிரசுக்கு 28 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா 'சீட்' வழங்கப்பட்டது.
இதையடுத்து போட்டியிடும் தொகுதிகள் எவை என்பதில், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் விரும்பும் தொகுதிகளை அடையாளம் காண்பதற்காக, சமீபத்தில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில், தற்போதைய 'சிட்டிங்' தொகுதிகள் 17 உடன், கூடுதலாக 11 தொகுதிகள் என, மொத்தம் 28 தொகுதிகளை தேர்வு செய்ய வேண்டும். இந்த 28 தொகுதிகளை அடையாளம் காண, 42 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயார் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், சிவகங்கை தொகுதி எம்.பி,, கார்த்தி என, கோஷ்டி தலைவர்கள் சிலரின் தலைமையில், தனித்தனியாக தொகுதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தி.மு.க., போட்டியிட விரும்பும் சில தொகுதிகளை, காங்கிரஸ் தரப்பும் தங்களுடைய பட்டியலில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
இது குறித்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை, “காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் தயாராகிறது. ''அதில், வெற்றியடைய கூடிய தொகுதிகள் கேட்டு பெறப்படும். இருந்தபோதும், தி.மு.க.,வுடனான பேச்சு சுமுகமாக இருக்கும்,” என்றார்.

