வாக்காளர் பட்டியலில் தி.மு.க., ஆதிக்கம்: தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார்
வாக்காளர் பட்டியலில் தி.மு.க., ஆதிக்கம்: தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார்
ADDED : நவ 21, 2025 01:03 AM

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் தி.மு.க.,வினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக, தலைமை தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார் மனு அளித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில், கடந்த 4ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர்., பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் நடைபெறும் பணிகளில் ஆளும் தி.மு.க., வினர், பெரிய அளவில் முறைகேடு செய்வதாக அ.தி.மு.க., குற்றஞ்சாட்டி உள்ளது. இது தொடர்பாக, டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், அ.தி.மு.க., -- எம்.பி.,க்கள் சண்முகம், இன்பதுரை ஆகியோர் நேற்று புகார் அளித்தனர்.
பின்னர், அவர்கள் அளித்த பேட்டி:
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளில் பெரிய அளவில் முறைகேடு நடைபெறுகிறது. இறந்து போனவர்கள்; வேறு இடத்துக்கு குடி பெயர்ந்தவர்கள்; போலி வாக்காளர்கள்; இரட்டைப்பதிவு போன்ற பெயர்களை நீக்கவில்லை. தேர்தல் கமிஷன், தன் பணிகளைச் செய்யும்போது, நிர்வாகம், அதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும். ஆனால், தமிழகத்தில், அந்த நிலை இல்லை.
ஈரோடு கிழக்கு தொகுதியில், அந்த தொகுதிக்கு தொடர்பில்லாதோர் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ளன; அவற்றை நீக்கவில்லை. சென்னை தாம்பரம், இரும்புலியூர் பகுதியில், ஒரே வீட்டில் 360 ஓட்டுகள் உள்ளன. ஒரே எண் கொண்ட வீட்டில், இத்தனை பேர் வசிப்பது எப்படி சாத்தியம்.
பி.எல்.ஓ., வழியாக வழங்கப்பட வேண்டிய எஸ்.ஐ.ஆர்., படிவங்கள், தி.மு.க.,வினர் வாயிலாக வாக்காளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆட்சி நிர்வாகமே, வருவாய்த் துறையினரை வேலை நிறுத்தம் செய்ய துாண்டி விடுகிறது. வாக்காளர் பட்டியலில் யாரை சேர்க்க வேண்டும்; யாரை நீக்க வேண்டும் என்பதை தி.மு.க.,வினர் தீர்மானிக்கின்றனர்.
தேர்தல் கமிஷனின் அதிகாரங்களை அவர்கள் அபகரித்து, சட்டவிரோதமாக செயல்படுகின்றனர். புகார்கள் அளித்தால், தமிழகத்தில் உள்ள தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால், டில்லியில் புகார் அளிக்க வந்தோம். ஆனால், எம்.பி.,க்களாகிய எங்களைக்கூட தேர்தல் அதிகாரிகளும், ஆணையர்களும் சந்திக்க மறுக்கின்றனர்.
உண்மையிலேயே, விதிகளின்படி தான் எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. தி.மு.க.,வினரின் அடாவடி போக்கானது, எஸ்.ஐ.ஆர்., நடைமுறையை அர்த்தமற்றதாக்கி விட்டது. வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக கூறிக் கொண்டிருக்கும் ராகுல், அவரது நண்பர் ஸ்டாலினிடம், இந்த குளறுபடிகளை எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- டில்லி சிறப்பு நிருபர் --

