நா.த.க.,வுக்கு அஞ்சிய தி.மு.க.,: ஈரோட்டில் கடைசி நேர 'கவனிப்பு'
நா.த.க.,வுக்கு அஞ்சிய தி.மு.க.,: ஈரோட்டில் கடைசி நேர 'கவனிப்பு'
ADDED : பிப் 05, 2025 06:06 AM

ஈரோடு : ஈரோடு கிழக்கில் தி.மு.க., - நா.த.க., வேட்பாளர்கள் உட்பட, 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இத்தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகள் ஒதுங்கியதால், தி.மு.க., - நா.த.க., இடையே போட்டி நிலவுகிறது.
எப்படியும் வெல்வோம் என்ற நம்பிக்கையில், பல அமைச்சர்களின் வருகை, முதல்வர், துணை முதல்வர் பிரசாரத்தை உள்ளூர் தி.மு.க., தவிர்த்தது. ஆனால், ஈ.வெ.ரா., குறித்தும், தி.மு.க., ஆட்சி குறித்தும் சீமான் உள்ளிட்டோர் பேச்சால் பிரசார களம் கலகலத்தது.
இதனால் யுக்தியை மாற்றிய தி.மு.க.,வினர், பிரசாரம், மேடை பேச்சை தவிர்த்து, வீடுவீடாக சென்றும், வாக்காளர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றும், சிறிய அளவில் ஊக்கப்பரிசு கொடுத்து கவனித்தனர்.
கடந்த 2023 இடைத்தேர்தலில், நா.த.க., 10,827 ஓட்டுகள் பெற்றது. இம்முறை அதை விட கூடுதலாக அல்லது டிபாசிட் பெற்று விடக்கூடாது என, தி.மு.க., பல முயற்சிகளை மேற்கொண்டது.
இதனால், எப்படியாவது வாக்காளர்களை ஓட்டளிக்க செய்தாக வேண்டும் என்ற அச்சத்தால், ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்களை கடந்த 2, 3, 4ல் கடைசி நேர கவனிப்பு வாயிலாக தி.மு.க., குஷிப்படுத்தியது.