காவல் துறைக்கு துப்பில்லை என தி.மு.க., அரசு ஒப்புதல்: பழனிசாமி
காவல் துறைக்கு துப்பில்லை என தி.மு.க., அரசு ஒப்புதல்: பழனிசாமி
ADDED : நவ 06, 2025 04:03 AM

சென்னை: 'கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியை, 100 போலீசார், நான்கரை மணி நேரம் தேடியும் கண்டு பிடிக்க முடியாமல் போனது ஏன்?' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விளக்கம் அளித்த போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், 'ஞாயிறு இரவு 11:20 மணிக்கு, மாணவியின் நண்பர் போலீசாரை தொடர்பு கொண்டதாகவும், இரவு 11:35 மணிக்கு சம்பவ இடம் சென்ற போலீசார், மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு மாணவியை கண்டதாகவும், அதுவும் மாணவி தானாக வந்து சேர்ந்ததாகவும்' தெரிவித்தார்.
தம்பட்டம் அப்படி என்றால், இரவில் நான்கு மணி நேரம் 25 நிமிடம், காவல் துறை என்ன செய்தது என்பதே தற்போது எழும் கேள்வி.
குற்றவாளிகளை பிடித்து விட்டதாக தம்பட்டம் அடிக்கும் முதல்வர் ஸ்டாலின், தன் காவல் துறையால் சம்பவ இடத்தில் நான்கரை மணிநேரம் தேடியும், அந்த மாணவியை கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு, வெட்கி தலை குனிய வேண்டும்.
நுாறு போலீசார் இணைந்து பெரிய தேடுதல் வேட்டை நடத்தியதாக போலீஸ் கமிஷனர் சொல்கிறார். நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லையா?
'போலீசார் கண்டு பிடிக்க முடியாத இடத்திற்கு, மாணவி எப்படி சென்றார்?' என கேட்டபோது, 'சிறிய சுவர் இருந்தது; அதை தாண்டி சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை' என கூறிய கமிஷனர், சில நிமிடங்களில், 'மிகப்பெரிய சுவர் இருந்தது; மாணவி அதை தாண்டிச் சென்றிருந்தார்' என மாற்றி கூறுகிறார்.
விளக்கம் வேண்டும் சிறிய சுவரோ, பெரிய சுவரோ; அதை தாண்டிச் சென்று காவல் துறை ஏன் தேடவில்லை? 'இருள் சூழ்ந்த இடம் என்பதால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை' என விளக்கம் கூற, தி.மு.க., அரசின் காவல் துறை கூச்சப்பட வேண்டும்.
பாலியல் வன்கொ டுமைக்குள்ளான ஒரு பெண்ணை, நள்ளிரவில் சம்பவ இடத்தில் தேடி கண்டுபிடிக்க தன் காவல் துறைக்கு துப்பில்லை என, தி.மு.க., அரசு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறதா?
இந்த சூழலில், 'குற்றவாளிகள் கைது, குற்றப்பத்திரிகை ஒரு மாதத்தில் தாக்கல் செய்து விடுவோம்' என பெருமை பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
நான்கரை மணி நேரமாக, மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன் என்பது குறித்து, காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

