505ல் 373 தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை; 'விடியல் எங்கே' புத்தகம் வெளியிட்டார் அன்புமணி
505ல் 373 தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை; 'விடியல் எங்கே' புத்தகம் வெளியிட்டார் அன்புமணி
UPDATED : ஆக 27, 2025 09:41 AM
ADDED : ஆக 27, 2025 04:00 AM

சென்னை: ''கடந்த 2021 தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதில், 373 வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை,'' என பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டினார்.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'விடியல் எங்கே; தி.மு.க.,வின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள்' என்ற ஆவண புத்தகத்தை வெளியிட்டு, அவர் பேசியதாவது:
ஒருவரை ஏமாற்ற நினைத்தால், அவருக்கு ஆசை காட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதை பின்பற்றி தான், 99 சதவீத மோசடிகள், ஏமாற்று வேலைகள் நடக்கின்றன.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளும் இந்த வகையை சேர்ந்தவை தான். 'ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால், ஆசையை துாண்ட வேண்டும்' என்பது, சதுரங்க வேட்டை படத்தின் டயலாக் மற்றும் கதைக் கரு.
அதைத் தான் தாரக மந்திரமாகக் கொண்டு, கடந்த தேர்தலுக்கு முன் மக்களிடம் வாக்குறுதி என்னும் ஆசை காட்டி, ஓட்டுகளை பெற்று, பின் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மோசடி செய்துள்ளது தி.மு.க.,
கடந்த 2021 தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆட்சிக்கு வந்து, 50 மாதங்கள் முடிந்து விட்டன.
இதுவரை 12.94 சதவீதம் அதாவது, 66 வாக்குறுதிகள் மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டு உள்ளன; அந்த 66 வாக்குறுதிகளும் கூட அரைகுறையாக நிறைவேற்றப்பட்டு உள்ளன; 74.31 சதவீதம் அதாவது, 373 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவே இல்லை.
குறைந்தபட்சம் 35 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல், மக்கள் மன்றத்தில் தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது.
நுாறு நாள் வேலை திட்டம், 150 நாட்களாக அதிகரிக்கப்படும்; அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்; 3.50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை; மாதம் ஒரு முறை மின் கட்டணத்தை கணக்கிடும் முறை; பஸ் கட்டணம் குறைப்பு, காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்; கல்விக்கடன் தள்ளுபடி போன்ற முக்கியமான வாக்குறுதிகள், பேப்பர்களில் மட்டுமே உள்ளன.
பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற மேலாண்மை, ஊரக கட்டமைப்பு, சமூக நீதி ஆகிய ஏழு துறைகளில், முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.