தி.மு.க., பலம் இழந்து விட்டது; இனி நமக்கு தான் வெற்றி: நிர்வாகிகளிடம் பழனிசாமி பேச்சு
தி.மு.க., பலம் இழந்து விட்டது; இனி நமக்கு தான் வெற்றி: நிர்வாகிகளிடம் பழனிசாமி பேச்சு
ADDED : ஜூன் 14, 2026 03:44 AM

சென்னை: ''தி.மு.க., தன் பலத்தை இழந்து விட்டதால், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டால், அ.தி.மு.க.,வால் வெற்றி பெற முடியும்,'' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு பின் முதல்முறையாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு நேற்று காலை பழனிசாமி வந்தார்.
தேர்தல் தோல்வி குறித்து, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.
அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும், அ.தி.மு.க., தோல்வி அடைய என்ன காரணம் என, நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு நிர்வாகிகள் சிலர், 'கடைசி ஒரு வாரத்தில், சமூக வலைதளங்கள், மீடியா வாயிலாக விஜய் முன்னணியில் சென்று விட்டார். அவரை நாம் குறைத்து மதிப்பிட்டு விட்டோம். கரூர் விவகாரத்தில், விஜய்க்கு ஆதரவாக, அ.தி.மு.க., நின்றது தவறு' என, கருத்து தெரிவித்தனர்.
இதன்பின், பழனிசாமி பேசியதாவது:
சமூக வலைதள பிரசாரத்தால் தான், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. ஆனால், தொடர்ந்து ஆட்சி நடத்த அது மட்டுமே போதாது. இந்த ஆட்சி அமைந்த நாளில் இருந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளன. மின்வெட்டை தடுக்க முடியாமல், அரசு திணறுகிறது.
அனுபவம் இல்லாதவர்களுக்கு ஓட்டு போட்டு விட்டோமே என, மக்கள் அதிருப்தியில் உள்ளனர். 'ரீல்ஸ்' மோக ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது.
கூட்டணியால் தான், தி.மு.க., பலமாக இருந்தது. தற்போது, கூட்டணி எதுவும் இல்லாமல், தி.மு.க., தனித்து பலமில்லாமல் நிற்கிறது. ஆனால், நமக்கான கூட்டணி இன்னும் பலமாக இருக்கிறது.
எனவே, த.வெ.க., அரசுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாம் செயல்பட்டால், நிச்சயம் மக்கள் ஆதரவை நாம் பெற முடியும்.
கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுங்கள்; இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள். சமூக வலைதளங்களில் செயல்படும் கட்சி நிர்வாகிகளை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவியுங்கள்.
இவ்வாறு அவர் பேசியதாக கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
வழக்கமாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு பழனிசாமி வந்தால், சென்னை மாவட்ட செயலர்களான தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் வரவேற்பு அளிப்பர்.
ஆனால், நேற்று தலைமை அலுவலகத்துக்கு ஆதிராஜாராம் தவிர, வேறு மாவட்ட செயலர்கள் வரவில்லை. வராத நிர்வாகிகள் த.வெ.க.,வில் இணைய பேச்சு நடத்தி வருவதாக, அ.தி.மு.க., வட்டாரங்களில் தகவல் பரவியது.
