ADDED : ஜன 06, 2024 05:17 AM

'என் மண்; என் மக்கள்' நடைபயணம், இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும், மக்களை நேசிக்கும் பிரதமரின் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், தொகுதி மக்களை எல்லாம் சந்திக்கும் பேராவலில், பல்வேறு நெருக்கடிகளைக் கடந்தும் இந்தப் பயணம் நடக்கிறது.
ஓமலுார்
கெங்கவல்லி, ஓமலுார் பகுதிகள், மைசூருடன் இணைக்கும் கணவாய் அமைந்துள்ள முக்கியமான பகுதிகளாக விளங்கின. ரோஜா, சாமந்தி, மல்லிகைப் பூ என, 5,000 ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி நடைபெறும் மண். திருப்பதி பகவான் ஏழுமலையானை அலங்கரிக்கும் சாமந்திப் பூ, ஓமலுாரிலிருந்து செல்கிறது என்பது, இந்த மண்ணுக்குப் பெருமை.
ராமருக்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது என கேட்கின்றனர். ராமர் வைகுண்டம் சென்றடைய, சரபங்கா முனிவர் யாகம் நடத்திய மண் ஓமலுார். அவர் பெயரிலேயே சரபங்கா நதியும் இங்கு உள்ளது. மேலும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோட்டை மாரியம்மன் கோவில், கோட்டை பெருமாள் கோவில், வசந்தீஸ்வரர் கோவில்கள் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளன. இங்கு இருந்து கொண்டுதான், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்கின்றனர்.
இத்தனை அற்புதமான கலாசாரமும், சரித்திரமும் உடைய நம் தமிழகத்தில் ஜாதியை வைத்து அரசியல் செய்து, மக்களைப் பிரித்து சூழ்ச்சி செய்து, ஜாதி அரசியல் இன்றும் தமிழகத்தில் இருக்கக் காரணம், தி.மு. க., மட்டும்தான்.
வீரபாண்டி
ஒருகாலத்தில் முத்து எடுக்கப்பட்ட திருமணிமுத்தாற்றின் மையப் பகுதி, வீரபாண்டி தொகுதியில் தான் உள்ளது. புகழ்பெற்ற செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்குத்தி, திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக்கப்பட்ட முத்தால் ஆனது.
ஆனால், இப்பேர்ப்பட்ட பெருமைக்குரிய திருமணிமுத்தாறு, இன்று சேலத்தின் கூவம் என அழைக்கும் அளவுக்குப் பாழடைந்து விட்டது. வீரபாண்டி ஆட்டையாம்பட்டி கைமுறுக்கு புகழ்பெற்றது.
இங்குள்ள இளம்பிள்ளை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கைத்தறி மற்றும் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தியாகும், அபூர்வா பட்டு, சாமுத்திரிகா பட்டு, எம்போஸ் பட்டு, ஆல் எம்போஸ் பட்டு போன்றவை, தேசிய அளவில் மிகவும் புகழ் பெற்றவை.
* நெசவாளர்கள் நலன் காக்க, கடந்த 3 ஆண்டுகளில், மத்திய அரசு, தமிழகத்தில் 15 நெசவாளர் நேரடி விற்பனை சந்தைகள் அமைத்துள்ளது
* இந்தியாவில் அதிக நெசவாளர்கள் பயன் பெற்ற மாநிலம் தமிழகம். தமிழகத்தில் 1,07,335 பேர் பயன் பெற்றுள்ளனர்
* சூரியசக்தி மின்சாரம் மூலமாக விசைத்தறிகளை இயக்க, அதிகபட்சம் 8 விசைத்தறிகள் வைத்திருப்போருக்கு, மானியம் வழங்குகிறது மத்திய அரசு.
கடந்த 14 தேர்தல்களில், 10 முறை ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,க்களாக இருந்துள்ளனர். ஒரு குடும்பத்தின் பிடியில், வீரபாண்டி தொகுதி எந்த முன்னேற்றமும் இல்லாமல், நெசவுத் தொழிலும் நசிந்து, பல ஆண்டுகளாகச் சிக்கித் தவித்து வருகிறது.
தி.மு.க., செய்தது என்ன?
* பிரதமர் மோடியின் நல்லாட்சியில், சேலம் மாவட்டத்தில் 63,828 பேருக்கு பிரதமரின் திட்டத்தில் வீடுகள்
* 4,49,970 வீடுகளில் குழாயில் குடிநீர்
* 3,01,532 வீடுகளில் இலவச கழிப்பறைகள்
* 1,90,151 விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் என வழங்கப்பட்ட நலத் திட்டங்கள் ஏராளம்.
ஆனால், தமிழகத்தை ஆளும் தி.மு.க., அரசு மக்களுக்கு செய்த நலத் திட்டங்கள் என்ன?
வரும் காலத்தில் தேசிய நதிகள் அனைத்தையும் இணைக்கும் பல்வேறு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்த, தமிழகமும் பிரதமர் மோடிக்கு துணை நிற்க வேண்டும்.
பயணம் தொடரும்...