கொங்கு மண்ணில் தி.மு.க., கரைசேருமா; உதயநிதியின் ஆசைதான் நிறைவேறுமா
கொங்கு மண்ணில் தி.மு.க., கரைசேருமா; உதயநிதியின் ஆசைதான் நிறைவேறுமா
ADDED : பிப் 16, 2024 05:44 AM

சமீபத்தில் கோவை வந்திருந்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அரசு விழாவில் பேசுகையில், 'சென்ற முறை சின்ன சின்ன தவறுகள் நடந்திருந்தாலும் அதை திருத்திக் கொண்டு, சரி செய்ய வேண்டும்' என குறிப்பிட்டார்.
காரணம், 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடி, தி.மு.க., ஆட்சி செய்து வந்தாலும், கோவை மாவட்டத்தில், 10 தொகுதிகளிலும் வெற்றியை நழுவ விட்டதுதான். ஏற்கனவே தி.மு.க., வசம் இருந்த சிங்காநல்லுார் தொகுதியும் கூட பறிபோனது. இதை தி.மு.க., தலைமை எதிர்பார்க்கவே இல்லை.
இதன் காரணமாக, கொங்கு மண்டலம் அ.தி.மு.க.,வின் கோட்டை என, அ.தி.மு.க.,வினர் மார்தட்டினர். அ.தி.மு.க., செல்வாக்கை சரிய வைக்க வேண்டும் என்பதற்காகவே, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக, செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார்.
அவரது தடாலடி அரசியலால், உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., ஜெயிக்க முடியாமல் சுருண்டது; மேயர் வேட்பாளர் என, அ.தி.மு.க.,வினரால் சுட்டிக்காட்டப்பட்டவர்கள் கூட, தோல்வியை தழுவினர். செந்தில்பாலாஜி தற்போது சிறையில் இருக்கிறார். ஆகவே, மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டிய கூடுதல் பொறுப்பு, உதயநிதி வசம் வழங்கப்பட்டிருக்கிறது. இவரை மீறி யாரேனும் செயல்பட்டால், எதிர்காலம் வீணாகி விடும் என்கிற பயத்தில், கட்சியினரும் கட்டுப்பட்டு இருக்கின்றனர்.
இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கோவை லோக்சபா தொகுதி, தற்போது கூட்டணி கட்சியான மா.கம்யூ., வசம் இருக்கிறது. இங்கு கமல் போட்டியிட ஆசைப்படுகிறார். அதே நேரம், காங்கிரசும் தொகுதியை கைப்பற்ற போராடுகிறது. எதிர்க்கட்சிகள் வரிசையில் அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
இவ்விரு கட்சிகளின் வேட்பாளர்களையும் எதிர்த்து ஜெயிக்க வேண்டுமெனில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை தாரை வார்க்காமல், தி.மு.க.,வே நேரடியாக போட்டியிடுவதே சிறந்தது என, ஆலோசித்து வருகிறது.
தி.மு.க., நேரடி போட்டி
வெற்றி வாய்ப்புள்ள வேறு தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு, கோவை, திருப்பூரில் போட்டியிட நினைக்கிறது. இதற்காகவே, 'முதல்வரின் முகமாக கோவை, திருப்பூரை பார்க்கிறோம்' என, 'பஞ்ச்' வைத்திருக்கிறார். கோவை, திருப்பூரில் வெற்றி பெற்றால், தி.மு.க., அரசின் சாதனைக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என பார்க்கலாம்.
2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள எளிதாக இருக்கும். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை கொடுத்தால், 2026ஐ எதிர்கொள்வது எளிதாக இருக்காது. கடைசியாக, 1996ல் தி.மு.க., நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதன்பின் நடந்த தேர்தல்களில், தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு தள்ளி விட்டு விட்டது.
வரும் தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவே, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் நினைக்கின்றனர். கோவையை தி.மு.க., வென்றெடுப்பதை, கவுரவப் பிரச்னையாக கட்சி தலைமை பார்க்கிறது.
பா.ஜ., அ.தி.மு.க., ஆகிய இரண்டு எதிரிகளையும் ஒரே நேரத்தில் வீழ்த்தி, வெற்றியை பதிவு செய்ய நினைக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை வழங்கி விட்டு, உள்குத்து விவகாரங்களில், கைவிட்டு விட்டால், ஆட்சிக்கு அவப்பெயரே தொடரும் என்பதால், 28 ஆண்டுகளுக்கு பின், நேரடியாக களமிறங்க ஆலோசித்து வருகிறது. இவ்வாறு, தி.மு.க., வினர் கூறினர்.
-- நமது நிருபர் -