ADDED : ஜூலை 29, 2025 04:01 AM

சென்னை: விரிவாக்கம் செய்யப்பட்ட துாத்துக்குடி விமான நிலையம் திறப்பு, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா ஆகியவற்றில் பங்கேற்க, தமிழகத்துக்கு இரு தினங்களுக்கு முன் பிரதமர் மோடி வந்தார்.
துாத்துக்குடியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில், தி.மு.க., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்து, இரவில் திருச்சி வந்த பிரதமரை விமான நிலையத்தில், அமைச்சர் நேரு வரவேற்றார். பின்னர், கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் மறுநாள் நடந்த ஆடி திருவாதிரை விழாவில், பிரதமருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர் பங்கேற்றனர்.
இதற்கு முன், தமிழகத்துக்கு பிரதமர் மோடி வந்தபோது, தி.மு.க., அமைச்சர்கள் தவிர்த்த நிலையில், தற்போது, விமான நிலையங்களில் வரவேற்பு, பிரதமர் நிகழ்ச்சிகள் என ஆர்வமாக பங்கேற்றது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

