ஆதாரம் கேட்கிறது மத்திய அரசு கண்டனம் தெரிவிக்கிறது தி.மு.க., கீழடி அகழாய்வும் அரசியல் ஆகிறது
ஆதாரம் கேட்கிறது மத்திய அரசு கண்டனம் தெரிவிக்கிறது தி.மு.க., கீழடி அகழாய்வும் அரசியல் ஆகிறது
UPDATED : மே 24, 2025 02:30 AM
ADDED : மே 24, 2025 02:11 AM

சென்னை:கீழடி அகழாய்வு தொடர்பான ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியுள்ளதற்கு, தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சிவங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, கீழடியில், 2014 முதல் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. அது பற்றிய, 982 பக்க விரிவான ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கடந்த 2023 ஜனவரியில் சமர்ப்பித்தார்.
அதை, இந்திய தொல்லியல் துறை வெளியிடாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக, லோக்சபாவில் தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியுள்ளது. அதில் சில நுட்பமான விபரங்களுடன் திருத்தங்களைச் செய்து, மீண்டும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது.
இது தொடர்பாக, அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு, இந்திய தொல்லியல் துறை எழுதியுள்ள கடிதம்:
கி.மு., 5ம் நுாற்றாண்டு முதல் 8ம் நுாற்றாண்டு வரையிலான காலகட்டத்திற்கு திட்டவட்டமான நிரூபணம் தேவைப்படுகிறது. அனைத்து விபரங்களும் அறிவியல்பூர்வமாக பெறப்பட வேண்டும். சில வரைபடங்களும், சில விபரங்களும் தெளிவாக இல்லை. இரண்டு தொல்லியல் நிபுணர்களின் பரிந்துரைப்படி, அறிக்கையில் திருத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'இதுபோன்ற அறிவுறுத்தல்கள் இதுவரை வழங்கப்பட்டதில்லை. இரண்டு ஆண்டுகள் வெளியிடாமல் வைத்திருந்து, இப்போது திருத்தம் கோரியிருப்பது, வருத்தம் அளிக்கும் முடிவு' என, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் சிந்துவெளி ஆய்வாளருமான பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில், இந்திய தொல்லியல் துறைக்கு, தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதன் விபரம்:
தி.மு.க., செய்தி தொடர்பு செயலர் இளங்கோவன்: இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய, பழங்கால வாழ்க்கையை வெளிக்கொண்டு வந்துள்ள கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை ஏற்க மறுப்பது சரியல்ல.
தமிழகத்தின் தொன்மையை, பெருமையை, தமிழர்களின் வாழ்வியல் முறையை அங்கீகரிக்க, மத்திய பா.ஜ., அரசுக்கு மனமில்லை. தமிழர்கள், பா.ஜ., அரசை ஏற்கவில்லை என்பதால், தமிழர்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது.
மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன்: தமிழகத்தின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரிகள் யார் என்பதை, இந்திய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றும் பா.ஜ., அரசு, அதே வேகத்தோடு நமது வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருகிறது.
ஆனால், தமிழர் வரலாற்று தொன்மை என்பது, பா.ஜ., அரசின் அரசாணையோடு சம்பந்தப்பட்டதல்ல. அதை மறைக்க, அவர்களால் ஒருபோதும் முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.