வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வாக்குறுதி! விரும்பும் தி.மு.க., தலைமை; விரும்பாத நிர்வாகிகள்
வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வாக்குறுதி! விரும்பும் தி.மு.க., தலைமை; விரும்பாத நிர்வாகிகள்
ADDED : ஜன 30, 2026 04:27 AM

சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வாக்குறுதியை, தேர்தல் அறிக்கையில் இணைக்க தி.மு.க., தலைமை விரும்புகிறது; ஆனால், அக்கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடி பிடிக்கின்றனர்.
சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., - எம்.பி., கனிமொழி தலைமையில், 11 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை கேட்டு வருகிறது.
அதேபோல, முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின், 'பென்' நிறுவனம் சார்பில், ஒரு குழுவும் தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகிறது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு, வன்னியர் சமூகம் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சமூகத்தினர், அ.தி.மு.க.,வுக்கு எதிராக மாறினர். கடந்த தேர்தலில், தி.மு.க., வெற்றியடைந்ததற்கு, அந்த ஓட்டுகளும் முக்கிய பங்கு வகித்தன. பின், நீதிமன்றத்தில் அந்த இட ஒதுக்கீடுக்கு தடை விழுந்தது. ஆனால், தி.மு.க., அரசு அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், வன்னியர் சமூக ஓட்டுகளை பெற, '10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டரீதியாக அமல்படுத்துவோம்' என, தேர்தல் வாக்குறுதி கொடுக்க, தி.மு.க., தலைமை முடிவெடுத்து உள்ளது. அந்த இட ஒதுக்கீடு கோரிக்கை, பல வழிகளிலும் பிரச்னையை ஏற்படுத்துவதால் தான், அதை பழனிசாமியும், அன்புமணியுமே பேசாமல் அமைதி காக்கின்றனர்.
இப்போது தேர்தலுக்காக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அதை சேர்த்தால், தென் மாவட்டங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பும். அதேபோல, ஆட்சியில் இருக்கும்போது எதுவுமே செய்யாமல், இப்போது தேர்தலுக்காக அறிவிப்பதாக, வட மாவட்டங்களிலும் எதிர்ப்பு கிளம்பும். எனவே, 'இந்த முடிவை தி.மு.க., தலைமை கைவிடவேண்டும்' என, ஆளுங்கட்சியில் உள்ள வன்னியர் சமுதாய நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
'கடந்த தேர்தலில் கொடுத்த, 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை என, எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியவில்லை. 'இந்நிலையில், மீண்டும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அறிவிக்க வேண்டாம்' என, தலைமையிடம் மூத்த நிர்வாகிகளும் வலியுறுத்தி உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

