தி.மு.க., எம்.எல்.ஏ., அதிருப்தி; பா.ஜ., பக்கம் இழுக்க துாது
தி.மு.க., எம்.எல்.ஏ., அதிருப்தி; பா.ஜ., பக்கம் இழுக்க துாது
UPDATED : ஜூலை 15, 2024 12:43 AM
ADDED : ஜூலை 15, 2024 12:42 AM

திருச்சி : லால்குடி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியன், அமைச்சர் நேரு மற்றும் கட்சியினரால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால், கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இதையடுத்து, அவரை பா.ஜ.,வில் இணைக்க சிலர் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தி.மு.க.,வைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன், தொடர்ந்து நான்காவது முறையாக எம்.எல்.ஏ.,வாக உள்ளார். திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் நேருவின் தீவிர ஆதரவாளராக இருந்த இவருக்கும் அமைச்சர் நேருவுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது.
இதனால் அமைச்சர் நேரு, எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியனை அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிக்க, அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும் அவரை ஒதுக்கினர். கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்கு சவுந்தரபாண்டியன் அழைக்கப்படுவதில்லை.
கோபமான சவுந்தரபாண்டியன், சமீபத்தில் தான் இறந்து விட்டதாகவும், லால்குடி சட்டசபைத் தொகுதி காலியாக இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பதிவிட்டார். தொடர்ந்து பல்வேறு வகைகளில் தன் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழகம் முழுதும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இன்று காலை உணவுத் திட்டம் துவக்கப்படுகிறது. அதற்கான விழா லால்குடியிலும் நடக்கிறது. அதில் அமைச்சர் நேருவின் மகனும் பெரம்பலுார் எம்.பி.,யுமான அருண் அழைக்கப்பட்டிருக்கிறார்; சவுந்தரபாண்டியனுக்கு அழைப்பில்லை.
இப்படி தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால், தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்திருக்கும் சவுந்தரபாண்டியன், பதவியை ராஜினாமா செய்து விட்டு, மாற்று முகாமுக்குப் போய்விடலாமா என்ற யோசனையில் இருப்பதாக தகவல் பரவி உள்ளது.
இந்தத் தகவலை அடுத்து, தங்கள் கட்சிக்கு வாருங்கள் என, பா.ஜ., தரப்பில் சவுந்திரபாண்டியனுக்கு துாது அனுப்பப்பட்டு உள்ளதாக திருச்சி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.