நீதிபதி குறித்து வார்த்தையை விட்ட தி.மு.க.,-எம்.பி.,: திருப்பரங்குன்றம் பிரச்னையால் பார்லி.,யில் அமளி
நீதிபதி குறித்து வார்த்தையை விட்ட தி.மு.க.,-எம்.பி.,: திருப்பரங்குன்றம் பிரச்னையால் பார்லி.,யில் அமளி
ADDED : டிச 06, 2025 06:08 AM

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை முன் வைத்து, தி.மு.க., - எம்.பி.,க்கள் லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் கடும் அமளியில் இறங்கினர். அப்போது, நீதிபதி சுவாமிநாதன் பெயரை குறிப்பிடாமல், அவர் ஒரு அமைப்புடன் தொடர்டையவர் என, தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டினார். இதற்கு, பா.ஜ., - எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பை காட்டவே, ஆட்சேபனைக்குரிய அந்த வார்த்தையை நீக்கும் அளவுக்கு கடும் ரகளை ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை பார்லிமென்டில் எழுப்புவதற்கு திட்டமிட்டு, அதற்கேற்ப லோக்சபாவில் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசை தி.மு.க., - எம்.பி.,க்கள் வழங்கியிருந்தனர். காலையில் அலுவல்கள் துவங்கியதும், அந்த தீர்மானத்திற்கு அனுமதி மறுக்கப்படவே, தி.மு.க., - எம்.பி.,க்கள் அமளியில் இறங்கினர்.
அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா, ''கேள்வி நேரம் முடிந்ததும் பேசுவதற்கு அனுமதி தருகிறேன்,'' என்றார். அதை ஏற்காமல், தி.மு.க., - எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர்.
அரை மணி நேரம் வரை கூச்சலுக்கு மத்தியில், கேள்வி நேர அலுவல்கள் நடந்தன. அதன்பிறகு அமளி அதிகமாகவே, லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது. ஜீரோ நேரம் துவங்கியதும், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை வழி நடத்திய கிருஷ்ண பிரசாத் தென்னடி, தி.மு.க., - எம்.பி., பாலுவை பேச அழைத்தார்.
இதையடுத்து, பாலு பேசியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தால் தமிழகம் மட்டுமல்ல, சட்டத்தை மதிக்கும் அனைவரும் கவலையில் உள்ளனர். அங்குள்ள மலையில் தீபத்தை ஏற்ற வேண்டியது ஹிந்து அறநிலையத் துறையா அல்லது வேறு தவறான நபர்களா என்பது தான் பிரச்னை. அந்த நபர்கள் தான், பிரச்னையை துாண்டிவிட வேண்டுமென விரும்புகின்றனர். அத்தகைய நபர்கள், நீதிமன்றத்திற்கு சென்று (ஒரு அமைப்பின் பெயரை குறிப்பிட்டு), அந்த அமைப்பைச் சேர்ந்த நீதிபதியிடமிருந்து தீர்ப்பை வாங்கி விட்டனர். இவ்வாறு பாலு பேசினார்.
இதை கேட்ட பா.ஜ., - எம்.பி.,க்கள், 'நீதிபதியை, குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர் என எவ்வாறு குறிப்பிடலாம்' எனக்கூறி கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு கூறுகையில், ''பார்லிமென்டின் விதிகளுக்கு மாறாக பாலு பேசுகிறார். நீதிபதியை ஒரு அமைப்புடன் இணைத்து எப்படி பேச முடியும்? நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசுவது மிகவும் தவறானது. ''இந்த பேச்சு, உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் தேவையற்ற பிரச்னைகளை வரும் நாட்களில் உருவாக்கலாம். நீங்கள் பேச வேண்டிய கருத்துகளை தாராளமாக தெரிவிக்கலாம்; தவறில்லை. அதற்காகத்தான் வாய்ப்பு தரப்பட்டது.
''ஆனால், நீதிபதியை பற்றி இப்படி பேசுவதற்கு, எந்த வகையிலும் உரிமை இல்லை. எனவே, நீங்கள் குறிப்பிட்ட வார்த்தையை திரும்ப பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அதுவே தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்,'' என்றார். அதை ஏற்று, அந்த வார்த்தை நீக்கப்படுவதாக கூறிய கிருஷ்ண பிரசாத் தென்னடி, பாலுவுக்கு மீண்டும் பேச வாய்ப்பளித்தார்.
அப்போது பாலு, ''உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் தீபத்தை ஏற்றுவதற்கு, தேவஸ்தான போர்டுக்கு மட்டுமே உரிமை இருப்பதாக, கடந்த 1996ல் நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்துள்ளார். ''இந்நிலையில், அங்கு சிலர் மதக் கலவரத்தை ஏற்படுத்த பார்க்கின்றனர். இந்தியாவை ஆளும் ஒரு கட்சி தான், அந்த கலவரத் தீயை பற்ற வைக்கிறது,'' என்றார்.
இதை தொடர்ந்து, பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் முருகன் பேசியதாவது: ஐகோர்ட் தீர்ப்பு அளித்த பிறகும், திருப்பரங்குன்றத்தில் மக்கள் வழிபட, தி.மு.க., அரசு தடை செய்கிறது. அரசும், போலீசும் இணைந்து வழிபாட்டு உரிமையை மறுத்துள்ளன; சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அழைத்து சென்று, தீபம் ஏற்ற உத்தரவிட்டும், அதையும் தடுத்து, கைது செய்து அராஜகம் செய்துள்ளன.
'வெற்றி வேல்; வீர வேல்' என, அங்கு சென்று வழிபடுவோரின் உரிமையை, ஓட்டு வங்கி அரசியலுக்காக, ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை தாஜா செய்வதற்காக, தி.மு.க., அரசு இவ்வாறு செய்கிறது. அங்கு சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து, பக்தர்கள் மீது மிகப்பெரிய தாக்குதலை போலீசார் கட்டவிழ்த்துவிட்டனர். பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஜனநாயக குரல்வளை நசுக்கப்பட்டுள்ளது.
அரசியலுக்காக இத்தனையும் தி.மு.க., அரசு செய்கிறது. ஐகோர்ட் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர். மதுரை நீதிமன்றம் தீர்ப்பை தந்தும்கூட, மக்களை அனுமதிக்கவில்லை என்றால், அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய அரசியலமைப்பு 25வது ஷரத்து, ஒவ்வொருவருக்கும் சுதந்திரமாக வழிபடும் உரிமையை தந்துள்ளது.
மேலும், இந்த பிரச்னை மாநிலத்தில் விவாதிக்கப்பட வேண்டியது. அதை விட்டுவிட்டு, இங்கு வந்து பார்லிமென்டை முடக்க வேண்டுமென்று இவ்வாறு அமளி செய்கின்றனர். சட்டத்தின்படி, ஐகோர்ட் தீர்ப்பை தமிழக அரசு மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ராஜ்யசபாவிலும் இதே பிரச்னையை கிளப்ப, தி.மு.க., - எம்.பி.,க்கள் முயன்றனர். அதற்கு அனுமதி மறுக்கப்படவே, வேறு வழியின்றி அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- நமது டில்லி நிருபர் -

