தி.மு.க.,வில் அடுத்தடுத்து மாநாடுகள்; செலவை எண்ணி மா.செ.,க்கள் அலறல்
தி.மு.க.,வில் அடுத்தடுத்து மாநாடுகள்; செலவை எண்ணி மா.செ.,க்கள் அலறல்
ADDED : ஜன 14, 2026 05:23 AM

தி.மு.க.,வில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் இளைஞரணி மாநாடு, துணை பொதுச்செயலர் கனிமொழி தலைமையில் மகளிர் அணி மாநாடு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஓட்டுச்சாவடி முகவர்கள் மாநாடு அடுத்தடுத்து நடக்க உள்ளன.
திருவண்ணாமலையில் வட மண்டல இளைஞரணி சார்பில், மாநாடு நடத்தி முடிக்கப்பட்டது. அடுத்து, தென் மண்டல இளைஞரணி மாநாடு, பிப்., முதல் வாரத்தில் விழுப்புரத்தில் நடக்கவுள்ளது. பின்னர், மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு நடத்தப்பட உள்ளது.
இப்படி இளைஞரணி மாநாடுகளுக்கு இணையாக, மற்றொரு பக்கம் மகளிர் அணி மாநாடும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, வரும் 26ம் தேதி, மத்திய மண்டலம் சார்பில் தஞ்சாவூரில் மகளிர் அணி மாநாடு, கனிமொழி தலைமையில் நடக்கிறது; முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
ஏற்கனவே, மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்திலும், வட மண்டலத்திலும் மகளிர் அணி மாநாடு நடத்த வேண்டியுள்ளது.
தென் மண்டல தி.மு.க.,வுக்கு கனிமொழி பொறுப்பாளராக இருப்பதால், அம்மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க, கனிமொழி ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த, தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு, பிப்., 8-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கவுள்ளது.
அதை தொடர்ந்து, மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டல ஓட்டுச்சாவடி முகவர்கள் மாநாடுகள் அடுத்தடுத்து நடத்தப்படுகின்றன.
அடுத்த மாதம் முழுதும் சங்கிலி தொடராக மாநாடுகள் நடத்தப்படுவதால், அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் அதிகளவில் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இது குறித்து, மா.செ.,க்கள் சிலர் கூறியதாவது:
தி.மு.க., வரலாற்றில் இதுவரை இப்படி தொடர் மாநாடுகள் நடத்தப்பட்டது இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடும், வேட்பாளர்கள் அறிவிப்பு மாநாடும் மட்டும் தான் நடக்கும்.
ஆனால், தற்போது மகளிர் அணி, இளைஞரணி, ஓட்டுச்சாவடி முகவர்கள் மாநாடு என பிரித்து பிரித்து நடத்துவதால், செலவை நினைத்து கட்சி நிர்வாகிகள் கதி கலங்கி போய் உள்ளனர். ஒன்று, மாநாடுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது மாநாட்டு செலவுக்கு தலைமை பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

