தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/'கரூரில் தி.மு.க.,வினர் மிகப்பெரிய சதியை செய்துவிட்டனர்': த.வெ.க., ஆனந்த்

'கரூரில் தி.மு.க.,வினர் மிகப்பெரிய சதியை செய்துவிட்டனர்': த.வெ.க., ஆனந்த்

'கரூரில் தி.மு.க.,வினர் மிகப்பெரிய சதியை செய்துவிட்டனர்': த.வெ.க., ஆனந்த்


ADDED : ஏப் 20, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க., பொதுச்செயலரும் சென்னை தி.நகர் வேட்பாளருமான என்.ஆனந்த், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

விஜயுடன் நீண்ட காலமாக பயணிக்கிறீர்கள்; விஜய்க்கு அரசியல் ஆசை எப்போது வந்தது?



அரசியல் என்பது மிகவும் சவாலானது. அதில் ஆசை என்பது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான். அந்த வகையில், விஜயின் இளமைக் காலத்தில் இருந்தே, அவருக்கு அரசியல் ஈடுபாடும் ஆர்வமும் இருந்தது. அதனால் தான், தன் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். தொடர்ந்து, ஏராளமான நலத்திட்ட பணிகளை செய்து வந்தார்.

ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைகள் இருந்தபோது அரசியலுக்கு வராத விஜய், தற்போது வந்தது எதனால்?



ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் ஆளுமைமிக்க தலைவர்கள். அவர்கள் இருந்தவரை, 'நீட்' போன்று தமிழகம் விரும்பாத எதுவும் உள்ளே வரவில்லை. ஆனால், தற்போதைய தலைவர்கள், டில்லியின் சொல் பேச்சை கேட்கும் ஆட்களாகவே உள்ளனர். அவர்களால் தமிழகத்தின் உரிமை ஒவ்வொன்றாக பறிபோகிறது; அதை தடுக்க வேண்டும்.

அதோடு, தன்னை இந்தளவுக்கு உயர்த்திய தமிழக மக்களுக்கு, திருப்பி நல்லது செய்யவே, சினிமாவில் உச்ச இடத்தை உதறி தள்ளிவிட்டு, இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார்.

கரூரில் என்ன நடந்தது? உங்கள் பார்வையில் சொல்லுங்களேன்.



கரூர் விவகாரம், த.வெ.க.,வின் ஒவ்வொரு தொண்டனுக்கும் மிகப்பெரிய ரணத்தை உண்டாக்கியது. அதற்கு முழு காரணம், தி.மு.க., அரசும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தான். எங்களை பழிவாங்குவதாக நினைத்து, திட்டமிட்டு இவ்வளவு பெரிய சதியை செய்து விட்டனர்.

அரசியலுக்காக தி.மு.க., எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை, அப்போது தான் தெரிந்து கொண்டோம். கரூரில் விஜய் இருந்திருந்தால், அவரையும் தி.மு.க., என்ன வேண்டுமானாலும் செய்திருக்கும்.

கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்த பின், பா.ஜ.,வை விஜய் விமர்சிக்காதது ஏன்?



இந்த கேள்வியே வேடிக்கையாக உள்ளது. எங்களின் கொள்கை எதிரி பா.ஜ., என அறிவித்துவிட்டு தான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதில் எந்த சமரசமும் இல்லை. பா.ஜ., தான் எங்கள் எதிரி என, தி.மு.க., கூட இப்படி சொல்லவில்லை; சொல்லவும் செய்யாது. தற்போது நடப்பது சட்டசபை தேர்தல்.

இப்போது வீழ்த்த வேண்டியது தி.மு.க.,வை தான். அதை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது. த.வெ.க.,வுக்கும் தி.மு.க.,வுக்கும் இடையே தான் போட்டி என்ற நிலை உருவாகி இருக்கும் நிலையில், பா.ஜ.,வை எதிர்த்து, எங்கள் இலக்கை மாற்ற விரும்பவில்லை.

அதேநேரத்தில், தொகுதி மறுவரையறை சட்டத்தை கொண்டு வரும் பா.ஜ.,வை, விஜய் கடுமையாக எதிர்த்திருக்கிறார்.

தி.மு.க.,வை காட்டமாக விமர்சிக்கும் விஜய், அ.தி.மு.க., மீதான விமர்சனத்தை தவிர்ப்பதன் பின்னணி என்ன?



த.வெ.க.,வுக்கும் தி.மு.க.,வுக்கும் தான் போட்டி இருக்கிறது. களத்துக்கு வெளியே இருக்கும் கட்சிகளை விமர்சிக்க அவசியமில்லை.

த.வெ.க.,வுடன் யாரெல்லாம் கூட்டணி அமைக்க ஆசைப்பட்டனர்? எந்த கட்சிகளுடன் பேச்சு நடந்தது?



தி.மு.க., தவிர எல்லா கட்சிகளும் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க ஆசைப்பட்டன. யாருடன் பேச்சு நடந்தது என்பதை, தற்போது பேச வேண்டிய அவசியமில்லை.

விஜய்க்காக போஸ்டர் ஒட்டியவர்களுக்கு தான் 'போஸ்டிங்' என்று நீங்கள் சொன்னாலும், தற்போது த.வெ.க., வேட்பாளர்களில் பலரும், மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களாக உள்ளனரே...


த.வெ.க., எனும் கட்சி தொடங்கப்படும்; விஜய் முதல்வர் ஆவார் என எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், அவரின் ரசிகர்களாக, இரவு பகல் பாராமல் பலரும் வேலை செய்தனர்.

அவர்களில், அரசியல் ஆர்வமுள்ளவர்களை தேர்வு செய்துதான், த.வெ.க.,வில் மாவட்டச் செயலர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகளாக நியமித்தோம்.

தலைவர் விஜயின் தலைமையை ஏற்று, பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களில் சிலருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான். மற்றபடி, பெரும்பாலான வேட்பாளர்கள், மக்கள் இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் தான்.

த.வெ.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பின், பல மாவட்டங்களிலும், த.வெ.க., நிர்வாகிகள் நடத்திய போராட்டங்களை கவனித்தீர்களா?



தி.மு.க.,வுக்கு இணையாக பெரிய அரசியல் இயக்கமாக த.வெ.க., வளர்ந்து நிற்கிறது. எங்களுக்கு முதல் தேர்தல் இது தான். எனவே தான், தேர்தலில் போட்டியிட எல்லா நிர்வாகிகளும் விருப்பப்பட்டனர். ஆனால், 234 தொகுதிகள் தானே உள்ளன.

வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதும், நிர்வாகிகள் சிலர் அதிருப்தியாகினர். ஆனால், தற்போது எல்லா நிர்வாகிகளும், த.வெ.க., வெற்றிக்கு பம்பரமாய் வேலை செய்து வருகின்றனர். இதுதான் த.வெ.க.

விஜய், வீட்டில் இருந்தே அரசியல் செய்கிறார் என்ற விமர்சனம் உள்ளது. உங்கள் பதில் என்ன?



இது அபத்தமான விமர்சனம். விஜய் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சிக்கு, காவல் துறை அனுமதி வாங்க நாங்கள் எவ்வளவு போராடுகிறோம் என்பது உங்களுக்கே தெரியும். த.வெ.க.,வை முடக்க வேண்டும். விஜயின் நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் தான், தி.மு.க., அரசு குறியாக இருந்தது. எங்களுக்காகவே, எஸ்.ஓ.பி., என கொடுங்கோல் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கினர். விஜயை முடக்க வேண்டும் என தி.மு.க., நினைத்தது. ஆனால், அவர் இன்று மக்கள் வெள்ளத்தில் மிதப்பதை கண்டு துாக்கத்தை தொலைத்திருப்பர்.

விஜயின் அசைவுகள் எல்லாமே, வியூக நிபுணர்கள் சொல்படிதான் நடக்கிறதா?



இல்லைவே இல்லை. அரசியல் வியூகம் வகுப்பதில் விஜயை மிஞ்ச யாருமே இல்லை.

புதுச்சேரி பின்புலம் கொண்ட நீங்கள், அங்கு போட்டியிடாமல் தமிழகம் வந்தது ஏன்?



தமிழை தாய்மொழியாக கொண்ட புதுச்சேரியும் தமிழகமும் எனக்கு வேறு இல்லை. இரண்டும் ஒன்று தான். தமிழகம் தான் என் தாய்வீடு. அதனால் இங்கு போட்டியிடுகிறேன்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உங்களுக்கும் விஜய்க்கும் நெருக்கம் என்பதால் தான், அங்கு நீங்கள் போட்டியிடவில்லை என்கின்றனரே?



அப்படியெல்லாம் இல்லை. விஜய்க்கு எல்லாரும் நண்பர்கள் தான். ஆனால், தேர்தல் அரசியலில் அப்படி இருக்க முடியாது. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க, தனித்து வேட்பாளர்களை களமிறக்கி உள்ளோம். த.வெ.க., புதுச்சேரியிலும் ஆட்சி அமைக்கும். தேர்தல் முடிவுக்கு பின், பல கட்டுக்கதைகள் சுக்குநுாறாகும்.

புதுச்சேரிக்கும், தமிழக அரசியல் களத்துக்கும் என்ன வித்தியாசம்?



புதுச்சேரி மிகச்சிறிய யூனியன் பிரதேசம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட, கவர்னருக்கு தான் எல்லா அதிகாரமும் உள்ளது. ஆனால், தமிழகம் அப்படி இல்லை. மக்களாட்சி நடக்கும் மாபெரும் மாநிலம்.

இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் மாநிலம். எனவேதான், ஆண்டின் 365 நாளும், தேர்தல் நாள் போலவே இருக்கிறது. உண்மையில் தமிழக அரசியல் களம் சவாலானது தான்.

திராவிட கட்சிகள், ஓட்டுக்கு பணம் கொடுப்பது போல், உங்கள் கட்சியினரும் வழங்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறதே...



ஓர் அரசியல் மாற்றத்துக்காக விஜய் வந்திருக்கிறார். தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற கட்சிகள் செய்யும் தவறை, ஒருபோதும் விஜய் செய்யமாட்டார். அந்த தவறை செய்ய, யாரையும் அனுமதிக்க மாட்டார். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளை, மக்களே துாக்கி எறிவர். விசில் புரட்சி நடக்கும்.

திராவிட கட்சிகளுக்கு மாற்று என கூறிவிட்டு, இலவசம் போன்றவற்றில் அக்கட்சிகளை பின்பற்றுவது சரியா?



மக்களுக்கு அரசு செய்வதை இலவசம் என்று சொல்வதே தவறு. மக்களுக்கு என்ன தேவை என்பதை கொடுப்பதே, நல்ல அரசின் பணி. அப்படியான நல்ல நேர்மையான ஆட்சியை கொடுக்கவே, மக்கள் தேவையை அறிந்து, அதை வாக்குறுதியாக விஜய் கொடுத்துள்ளார்.

செய்ய முடிந்ததை தான் வாக்குறுதியாக கொடுக்கிறோம். தி.மு.க.,போல் செய்ய முடியாததை, ஒருபோதும் வாக்குறுதியாக விஜய் கொடுக்க மாட்டார்.

த.வெ.க., ஆட்சியை பிடிக்கும் என்கிறீர்கள். ஆனால், 'சர்வே' எதுவும் அப்படி இல்லையே?



சினிமாவில் விஜய் இருந்தபோதும், அவரை எல்லாருமே குறைத்து மதிப்பிட்டனர். ஆனால், மக்கள் செல்வாக்கால் மாபெரும் நடிகராக உயர்ந்தார்.

அதேபோல் தான், அரசியலிலும் அவரை குறைத்து மதிப்பிடுகின்றனர். அவரின் வளர்ச்சி பிடிக்காத ஆட்கள், 'சர்வே' என்ற பெயரில், பொய்களை கட்டமைக்க முயல்கின்றனர். ஆனால், அவர்கள் எதிர்பார்க்காத மாபெரும் வெற்றியை விஜய் பெறுவார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us