தீபாவளி கொண்டாட்டம் தி.மு.க.,வில் பண மழை: கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி
தீபாவளி கொண்டாட்டம் தி.மு.க.,வில் பண மழை: கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 14, 2025 04:37 AM

வரும் சட்டசபை தேர்தலுக்கு நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில், தீபாவளியையொட்டி தி.மு.க.,வில் வார்டு செயலர் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை, தலா, 10,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதனால், அக்கட்சியினர் பண மழையில் நனைந்து வருகின்றனர்.
தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
பத்து ஆண்டுகளுக்கு பின், தி.மு.க., ஆட்சிக்கு வந்த நிலையில், அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தங்கள் கட்சியினருக்கு பெரிய அளவில் எந்த உதவிகளையும் செய்யவில்லை.
திருமணம் உட்பட வீட்டில் நடக்கும் சுப காரியங்களுக்கு அழைத்தால், 2,000 ரூபாய் வரை மொய் வைக்கின்றனர். ஆனால், அவர்களுக்காக சால்வை, வரவேற்பு என, அதை விட கட்சியினர் பல மடங்கு கூடுதலாக செலவழிக்கின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற உழைத்தவர்களை, கண்டு கொள்ளாததால், வார்டு முதல் மாவட்டம் வரை, பல்வேறு பொறுப்புகளில் உள்ள கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த விபரம், முதல்வர் ஸ்டாலின் குடும்ப உறவினரின் ஆய்வு நிறுவனம் வாயிலாக கட்சி தலைமைக்கு சென்றது.
அறிவுறுத்தல் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. எனவே, தீபாவளியை ஒட்டி, அனைத்து மட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளையும் கவனிக்குமாறு, அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.
அதைத்தொடர்ந்து, வார்டு அளவில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் வரை, 'கவனிப்பு' பணி வேகமாக நடக்கிறது.
மாநகரங்களில் ஒரு வார்டில், ஒரு செயலர், ஒரு அவைத் தலைவர், மூன்று துணை செயலர்கள், ஐந்து - ஆறு பகுதி பிரதிநிதிகள் உள்ளனர். மாநகரங்களை தவிர்த்த மற்ற பகுதிகளில் பகுதி செயலர், மூன்று துணை செயலர்கள், சராசரியாக தலா ஐந்து மாவட்ட பிரதிநிதிகள், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர் ஆகியோர் உள்ளனர்.
பகுதி பிரதிநிதிகள், துணை செயலர்களுக்கு தலா, 10,000 ரூபாய்; வார்டு செயலர், மாவட்டப் பிரதிநிதிகளுக்கு தலா, 50,000 ரூபாய்; பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தலா, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
பகுதி, ஒன்றிய செயலர்களுக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. பேரூர், நகர, மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகளுக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
ஊக்குவிப்பு
இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அணி நிர்வாகி களுக்கு, தலா, 10,000 முதல், 1 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு, தலா, 5,000 ரூபாய் ரொக்கம், பரிசுப் பொருள், பட்டாசு, இனிப்பு, வேட்டி, சட்டை வழங்கப்படுகின்றன.
இதன் வாயிலாக, கட்சி நிர்வாகிகளுக்கு, தீபாவளிக்கு பரிசு கொடுத்த தாகவும் இருக்கும்; தேர்தல் பணிகளை தொய்வின்றி பார்க்க கட்சியினரை ஊக்குவிப்பதாகவும் இருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -