தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்க சமூக ஊடகங்கள் வாயிலாக ஆலோசனை
தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்க சமூக ஊடகங்கள் வாயிலாக ஆலோசனை
ADDED : ஜன 04, 2026 04:58 AM

சென்னை: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, வாட்ஸாப், சமூக வலைதளம், ஏ.ஐ., தளம் ஆகியவை வாயிலாக, கருத்து தெரிவிக்கும் வசதியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக, தேர்தல் அறிக்கை தயாரிக்க, தி.மு.க., சார்பில், கட்சியின் துணைப் பொதுச்செயலர் கனிமொழி தலைமையில், 12 பேர் குழுவை, முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். இக்குழுவினர், வரும் 9ம் தேதி முதல், தமிழகம் முழுதும் பயணம் செய்து, அனைத்து தரப்பு மக்களையும், நேரடியாக சந்தித்து கருத்து கேட்க உள்ளனர்.
இந்நிலையில், தி.மு.க., தேர்தல் அறிக்கை தொடர்பாக, பொதுமக்கள் கருத்து தெரிவிக்க, மொபைல் போன் எண், இணையதளம், சமூக ஊடக தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு தளம் ஆகியவற்றை, முதல்வர் ஸ்டாலின், சென்னையில் நேற்று துவக்கி வைத்தார்.
அதன்படி, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை தெரிவிப்பதற்கு, மொபைல் எண், வாட்ஸாப் எண், மின்னஞ்சல் முகவரி, இணையதள பக்கம், சமூக வலை தளங்கள், செயற்கை நுண்ணறிவு தளம் ஆகியவை துவக்கப்பட்டுள்ளன.
மேலும், 'கடந்த 2021 தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட, 505 வாக்குறுதிகளில், 404 வாக்குறுதிகள், அதாவது 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
'நீட்' தேர்வு ரத்து, திருக்குறளை தேசிய நுாலாக அறிவிப்பது உள்ளிட்ட 37 வாக்குறுதிகள், மத்திய பா.ஜ., அரசு ஒத்துழைக்காததால், நிலுவையில் உள்ளன' என, தி.மு.க., தேர்தல் அறிக்கை குழு தெரிவித்துள்ளது.
இதுபோல, வரும் சட்டசபை தேர்தலுக்காக, 'ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற முழக்கத்தையும் தி.மு.க., முன்வைத்துள்ளது.

