உங்களில் ஒருவன்: பெண் போலீசுக்கு அறைவிட்ட தி.மு.க.,: புழுக்கத்தில் தவிக்கும் தமிழக போலீஸ்
உங்களில் ஒருவன்: பெண் போலீசுக்கு அறைவிட்ட தி.மு.க.,: புழுக்கத்தில் தவிக்கும் தமிழக போலீஸ்
ADDED : பிப் 01, 2024 03:45 AM

ஆத்மசுத்தியுடன் அகத்திய முனிவர் 1,000 ஆண்டுகளுக்கு முன் வழிபட்ட, பழமையான அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்திருக்கும் கீழ்ப்பெண்ணாத்துார் சட்டசபை தொகுதியிலும், அன்னை பார்வதி தேவி தவம் செய்ததாக கருதப்படும் பருவதமலை அமைந்திருக்கும் கலசப்பாக்கம் தொகுதியிலும், மலையே சிவலிங்கம், மண்ணே மகேஸ்வரன் என, மண்ணும் மலையுமாக இங்கிருக்கும் பொருள் என, எதை எண்ணினாலும் நமச்சிவாயமாகத் தோன்றும், அடி முடி காண இயலாத அண்ணாமலையார் கொலுவீற்றிருக்கும் திருவண்ணாமலை தொகுதியிலும், மக்கள் பாதயாத்திரை வெற்றிகரமாக நடந்தது.
நினைத்தாலே முக்தி
திருவாரூரில் பிறந்தால் முக்தி , சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, அக்னி தலமாகிய திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி.
மறைந்த முதல்வர் காமராஜரால், 1958ல் கட்டப்பட்ட சாத்தனுார் அணை வாயிலாக, 8,000 ஹெக்டேரில் கரும்பு, 5,000 ஹெக்டேர் அளவிற்கு உளுந்து, 3,500 ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடி நடக்கும் விவசாய பூமி திருவண்ணாமலை.
அநியாயமும், அராஜகமும் தி.மு.க.,வினர் ரத்தத்தில் ஊறியிருப்பது. கடந்த ஆண்டு தி.மு.க-.,வின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் என்பவர், தன் குடும்பத்துடன், நீண்ட நேரம் உண்ணாமுலையம்மன் கருவறை முன் நின்று கொண்டிருந்தனர்.
பக்தர்களுக்கு இடையூறாக இருந்தது. அதனால், சற்று ஒதுங்கி நில்லுங்கள் என்று கூறினார், காவலுக்கு நின்ற போலீஸ் பெண் ஆய்வாளர்.
போலீசுக்கு கொடூரம்
தி.மு.க., குறுநில மன்னர் குடும்பத்தினரை ஒதுங்கி நிற்கச் சொல்லலாமா; ஓங்கி அறைந்திருக்கிறார் ஸ்ரீதரன். குரல் எழுப்ப வேண்டிய போலீஸ் துறையே அமைதியாக இருக்க, முதல் ஆளாக பா.ஜ., சார்பில் குரல் எழுப்பப்பட்டது.
வேறு வழியின்றி, ஸ்ரீதரன் மீது எப்.ஐ.ஆர்., போட்டது போலீஸ். அவரது முன்ஜாமின் மனு மூன்று முறை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டும், இன்று வரை கைது செய்யப்படவில்லை. கைகள் கட்டப்பட்டுள்ளதாக, தமிழக போலீஸ் புழுக்கத்தில் தவிக்கிறது.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது நம் நம்பிக்கை. திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரத்தை மறைக்கும் வகையில், வணிக வளாகம் கட்டுவதற்காக, கோவிலின் மூலதன நிதியில் இருந்து, 6.4 கோடி ரூபாயை எடுத்துள்ளது தி.மு.க., அரசு. கோவில் மூலதன நிதியை, எந்த காரியத்துக்காகவும் எடுக்க, யாருக்கும் அனுமதி கிடையாது.
எல்லா மாவட்டங்களையும் போல, திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் மத்திய அரசு திட்டங்கள் வாயிலாக கிடைத்த தொகை பல நுாறு கோடி ரூபாய். பயனாளிகளும் லட்சக்கணக்கில் உள்ளனர்.
கலசப்பாக்கம்
கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட, நந்தவாடி அரசு உதவி பெறும் பள்ளியில், தேவையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. பள்ளி கட்டடத்தின் மேற்கூரைகள் உடைந்து விழுந்து, மழை நேரத்தில் வகுப்பறைக்குள் தண்ணீர் விழுகிறது.
அதனால், பக்கத்தில் உள்ள வராண்டாவில் தான் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது என்று பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.
பி.எம்.ஸ்ரீ என்ற திட்டத்தின் மூலம், இந்தியாவில் 14,500 பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 18,128 கோடி ரூபாயை, மத்திய அரசு செலவிட்டுள்ளது.
ஆந்திராவில் 662 பள்ளிகள், கர்நாடகாவில் 129 பள்ளிகள், தெலுங்கானாவில் 543 பள்ளிகள் என, அண்டை மாநிலங்கள் பிரதமர் திட்டத்தால் பயன் பெறுகின்றன.
ஆனால், தமிழகம் மட்டும் திட்டத்தை புறக்கணித்திருக்கிறது. மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தில் அரசியல் செய்கின்றனர்.
கீழ்ப்பெண்ணாத்தூர்
திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாயி மீது குண்டாஸ் போட்டவர், இன்று விவசாயத் துறை இயக்குனர். சமீபத்தில், இப்படி தான் பொய் செய்திகள் பரப்பும் ஒருவருக்கு, சமூக நல்லிணக்கத்திற்கான விருது கொடுத்தனர்.
பத்து நாட்களுக்கு முன், பல கோடிகளை வாரி இரைத்து, தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திய முதல்வர் ஸ்டாலின், மீண்டும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு என்று சொல்லி, ஸ்பெயின் போயிருக்கிறார்.
இதற்கு முன், இதே காரணத்துக்காக முதல்வர் துபாய் சென்றபோது, அவருடைய குடும்ப ஆடிட்டரும் சென்றார். கேள்வி எழுப்பப்பட்டு, பல மாதங்களாகியும் பதில் இல்லை. தமிழகம் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்றால், பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும். அந்நாளை நோக்கித்தான் தமிழக பா.ஜ., நகருகிறது.
பயணம் தொடரும்...