விரைவில் திமுக ஆட்சி அமையும்: மாஜி முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
விரைவில் திமுக ஆட்சி அமையும்: மாஜி முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ADDED : நவ 17, 2026 05:21 AM

சென்னை: ''விரைவில் தி.மு.க., ஆட்சி அமையும்; அதற்கு, தயாராக இருக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரனின் மகன் விஷால் நாராயணன், பெங்களூருவை சேர்ந்த ஜெகதீஷ் பாட்டீலின் மகள் ரிஷா பாட்டீல், திருமணம் சென்னையில் நேற்று நடந்தது.
மணமக்களை வாழ்த்தி, ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., பீடுநடை போடுவதற்கு, இந்த ஸ்டாலின் மட்டும் காரணம் அல்ல. நேரு போன்றவர்களும், துணையாக உள்ளனர் என்பது தான் உண்மை. அவரிடம் கோபம் இருந்தாலும் குணம் இருக்கும்; அன்பு இருக்கும். அவரிடம் வேகமும் இருக்கும்; விவேகமும் இருக்கும்.
நேரு, இன்றைக்கும் அமைச்சராகத்தான் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறார் எனவும், ஆட்சிப் பொறுப்பில் இல்லா விட்டாலும், நான் தான் முதல்வர் எனவும், இங்கு பேசினர். முதல்வர், அமைச்சர் என எங்களை அழைப்பதற்கு, வெட்கப்படுகிறோம். ஏனென்றால், மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
துாய சக்தி என சொல்லிக்கொண்டு, கொடுமையான ஆட்சியை, இன்றைக்கு த.வெ.க., நடத்திக் கொண்டிருக்கிறது. மனு கொடுக்க வந்தவரை, துணை சபாநாயகர் தாக்கி இருக்கிறார். பெண் கலெக்டருக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பதை, முதன்முதலில், தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி வெளிப்படுத்தினார். அதன்பின்பே, அது வெளியே தெரியவந்தது.
ஆனாலும், முதல்வர், வாய் திறக்க மறுக்கிறார். சட்டத்துறை அமைச்சர், 'அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்கிறார். இப்படி தான் இந்த ஆட்சி நடக்கிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட, விரைவில் நல்ல சூழ்நிலை அமைய இருக்கிறது. விரைவில் தி.மு.க., ஆட்சி அமையும். அதற்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி பேசுகையில், ''கட்சிப் பணி, மக்கள் பணிகளில் நீண்ட நெடிய அனுபவம் உள்ள நேரு, எனக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். கட்சிக்கு எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு அவர் உதாரணம்,'' என்றார்.
வாரந்தோறும் 'ரெய்டு'
முன்னாள் அமைச்சர் நேருவிடம், கடைசி நிமிடத்தில் சொன்னாலும் கூட, மிகச்சிறப்பாக கட்சி மாநாட்டை நடத்திக் காட்டுவார். அதனால் தான், த.வெ.க., ஆட்சியில், அவர் மீது சிறப்பு கவனம் செலுத்தி, வாரந்தோறும் 'ரெய்டு' நடத்துகின்றனர். இந்த மிரட்டல்களுக்கு எல்லாம், அவர் பணியக் கூடியவர் அல்ல என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
- கனிமொழி,
துணை பொதுச்செயலர், தி.மு.க.,
