4 முஸ்லிம் கட்சிகளுக்கு சேர்த்து 5 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க., முடிவு: கூட்டணிக்குள் அதிருப்தி
4 முஸ்லிம் கட்சிகளுக்கு சேர்த்து 5 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க., முடிவு: கூட்டணிக்குள் அதிருப்தி
ADDED : பிப் 07, 2026 05:24 AM

சென்னை: கடந்த தேர்தலில், இரு முஸ்லிம் கட்சிகளுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கிய தி.மு.க., தலைமை, வரும் தேர்தலில் நான்கு கட்சிகளுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்திருப்பதால், முஸ்லிம் கட்சிகள் அதிருப்தி அடைந்துஉள்ளன.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று, மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு என தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இவற்றில், ம.ம.க., மட்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றது. முஸ்லிம் லீக் போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
வரும் சட்டசபை தேர்தலில், எஸ்.டி.பி.ஐ., கட்சியும், தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும், தி.மு.க., கூட்டணியில் இணைய பேச்சு நடத்தி வருகின்றன. சிறுபான்மையினர் ஓட்டுகளை, நடிகர் விஜயின் த.வெ.க., பிரிக்கும் என தி.மு.க., கருதுவதால், முஸ்லிம் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர விரும்புகிறது.
கடந்த தேர்தலில், முஸ்லிம் லீக், ம.ம.க., ஆகிய இரு கட்சிகளுக்கு ஒதுக்கிய ஐந்து தொகுதிகளை, இப்போது நான்கு முஸ்லிம் கட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. அதன்படி, முஸ்லிம் லீக் கட்சிக்கு இரு தொகுதிகளும், மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் கிடைக்கும்.
இதனால், தி.மு.க., கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. இதற்கிடையே, ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா, 'ஐந்து தொகுதிகள் வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, முஸ்லிம் லீக் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் முஸ்லிம்கள் 10 சதவீதம் உள்ளனர். அதன்படி, முஸ்லிம்களுக்கு 24 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். தி.மு.க.,வின் பிரதான ஓட்டு வங்கியே முஸ்லிம்கள் தான்.
சிறுபான்மையினர் ஓட்டுகள் இல்லையெனில், தி.மு.க.,வுக்கு வெற்றி என்பது சாத்தியமில்லை. எனவே, முஸ்லிம் கட்சிகளுக்கு குறைந்தது 10 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும். அப்போது தான், முஸ்லிம்களின் ஓட்டுகள் முழுமையாக தி.மு.க.,வுக்கு கிடைக்கும்.
தி.மு.க., கூட்டணியில் புறக்கணிக்கப்படுகிறோம் என நினைத்தால், முஸ்லிம் இளைஞர்களின் ஓட்டுகள் சிதறும். இதை, தி.மு.க., தலைமை உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

