தி.மு.க.,வின் காலி சேர் அரசியல்; பிரதமர் மோடி விழாவில் முறியடிப்பு
தி.மு.க.,வின் காலி சேர் அரசியல்; பிரதமர் மோடி விழாவில் முறியடிப்பு
ADDED : ஜூலை 28, 2025 04:03 AM

துாத்துக்குடியில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில், தி.மு.க.,வினரின் காலி சேர் அரசியல் வியூகத்தை பா.ஜ.,வினர் முறியடித்தனர்.
கடந்த ஆண்டு, துாத்துக்குடி வ.உ.சி., துறைமுக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றபோது, பா.ஜ.,வினரின் கூட்டத்தை பார்த்து, தி.மு.க., அதிர்ச்சியடைந்தது.
துாத்துக்குடியில் நேற்று முன்தினம் நடந்த விரிவாக்கப்பட்ட விமான நிலைய திறப்பு விழாவிலும், அதுபோன்று நடக்காமல் தடுக்க, தி.மு.க., வகுத்த அரசியல் வியூகம், பா.ஜ., தொண்டர்களால் முறியடிக்கப்பட்டது.
துாத்துக்குடியில், 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் என முதலில் கூறப்பட்டது. அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
எம்.பி., கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜா, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன், எம்.எல்.ஏ.,க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா பங்கேற்றனர்.
முதல்வர் பங்கேற்பார் என, பா.ஜ.,வுக்கு நிகராக, விமான நிலையத்தை சுற்றி தி.மு.க., கொடிகள் கட்டப்பட்டன. 12,000 பேர் அமரும் அரங்கில், தி.மு.க., சார்பில் 6,000 பேர் பங்கேற்பர் என கூறி, பாஸ் பெறப்பட்டது.
முதல்வர், துணை முதல்வர் வருகை ரத்தானதால், தி.மு.க.,வினர் 2,000 பேர் மட்டுமே பங்கேற்றனர். விழா அரங்கம் முழுதும் பா.ஜ.,வினரே அதிகமாக காணப்பட்டனர்.
நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாகவே, 'மோடி வாழ்க, ஜெய் ஸ்ரீராம், வெற்றிவேல் வீரவேல்' கோஷங்கள் அதிர்ந்தன. தி.மு.க.,வினரும், 'முதல்வர் ஸ்டாலின் வாழ்க, துணை முதல்வர் உதயநிதி வாழ்க' என, எதிர் கோஷம் எழுப்பினர்.
பின்னர், பிரதமர் மோடி பேச துவங்கியதும் தி.மு.க.,வினர் ஒட்டுமொத்தமாக அரங்கில் இருந்து வெளியேறி, காலி சேர்கள் இருப்பது போன்று காட்ட முயன்றனர். ஆனால், அவர்கள் வெளியேற முடியாதபடி பா.ஜ.,வினர், தடுப்புகளை அமைத்திருந்தனர்.
இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:
பா.ஜ., எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க.,வினர், பிரதமர் மோடி பேச துவங்கியதும் அரங்கில் இருந்து வெளியேறி, காலி சேர் அதிகம் இருந்ததாக காண்பித்து அரசியல் செய்ய முயன்றனர்.
மேலும், 6,000 இருக்கைகளுக்கு பாஸ் வாங்கி வைத்திருந்தனர். ஆனால், அவர்களது காலி சேர் அரசியல் வியூகத்தை பா.ஜ., தொண்டர்கள் முறியடித்து விட்டனர்.
இதனால், தி.மு.க., தொண்டர்கள் சிலர், பிரதமர் பேசும்போது, சேர்கள் மீது ஏறி நின்று துண்டை சுழற்றியபடி கோஷம் எழுப்பினர். போலீசார் எச்சரித்ததும் அவர்கள் அமைதியாகினர்.
பிரதமர் பேசி முடிக்கும் வரை அவர்களால் அரங்கில் இருந்து வெளியேற முடியவில்லை. அவர்களின் முயற்சி, பா.ஜ.,வினரால் முறியடிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -