அதிருப்தியை போக்க தி.மு.க.,வில் பதவி; அன்பழகனுக்கு மா.செ., பொறுப்பு
அதிருப்தியை போக்க தி.மு.க.,வில் பதவி; அன்பழகனுக்கு மா.செ., பொறுப்பு
ADDED : ஜூலை 15, 2025 01:55 AM

சென்னை: தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர் கல்யாணசுந்தரம் எம்.பி., அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த சாக்கோட்டை அன்பழகனுக்கு, மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலர் கல்யாணசுந்தரம் எம்.பி.,க்கு, 80 வயதாகி விட்டதால், அவரிடமிருந்து மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
தற்போது, அவர் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். அவருக்கு பதிலாக, கும்பகோணம் எம்.எல்.ஏ., சாக்கோட்டை அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டத்திற்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரும் வகையில், தன்னை மந்திரி ஆக்குவர் என சாக்கோட்டை அன்பழகன் எதிர்பார்த்தார்.
ஆனால், அவருக்கு பதிலாக, திருவிடைமருதுார் தொகுதியை சேர்ந்த கோவி.செழியனுக்கு, உயர் கல்வி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
கூடவே, தான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனால், கும்பகோணத்தை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப் பாடுபடுவதாக கூறி, கடந்த சட்டசபைத் தேர்தலின் போது ஓட்டு சேகரித்தார்.
ஆனால், எம்.எல்.ஏ., ஆனபின், சொன்ன வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியவில்லை; பலமுறை, இது தொடர்பாக கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியும் எதுவும் நடக்கவில்லை. இதனால், கும்பகோணம் நகர மக்களை சந்திப்பதில் அவருக்கு ஒருவிதமான நெருடல் இருந்தது.
இந்த விஷயங்களால், கட்சி தலைமை மீது சாக்கோட்டை அன்பழகன் கடும் அதிருப்தியில் இருந்தார்.
இந்நிலையில், தேர்தல் நெருங்குவதால் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக, அன்பழகனுக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.