தி.மு.க., அரசை விமர்சிக்காதீர்: வி.சி., தலைமை அறிவுறுத்தல்
தி.மு.க., அரசை விமர்சிக்காதீர்: வி.சி., தலைமை அறிவுறுத்தல்
ADDED : ஏப் 02, 2025 05:56 AM

'தி.மு.க.,வுடன் கூட்டணி தொடர்வதால், ஆட்சியை விமர்சித்து கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டாம்' என, வி.சி., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, அதன் தலைமை அறிவுறுத்தி உள்ளது.
கடும் அதிருப்தி
தி.மு.க., - வி.சி., இடையிலான கூட்டணி, ஏழு ஆண்டுகளை கடந்துள்ளது. தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற வி.சி., இரண்டு எம்.பி., நான்கு எம்.எல்.ஏ.,க்களை பெற்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவும் உருவெடுத்துள்ளது. அதேநேரம், மாநிலத்தில் தி.மு.க., ஆட்சி அமைந்தபின், 160க்கும் மேற்பட்ட வி.சி., கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.
புதிதாக கொடிக் கம்பங்கள் அமைக்க, போராட வேண்டியுள்ளது. இவை, வி.சி., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே, தி.மு.க., அரசின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. அதேபோல், வேங்கை வயல் விவகாரத்தில், ஆளும் தி.மு.க., அரசின் மீது, வி.சி., கட்சியினர் இடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர், சமூக வலைதளங்கள் வாயிலாக, தி.மு.க., அரசின் நிலைப்பாட்டை விமர்சித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை, வி.சி., தொண்டர்கள் விமர்சிப்பது, அக்கட்சி தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் முகநுால் நேரலையில், கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன், “கட்சி வளர்ச்சி அடையும்போது, முன்னணி தலைவர்கள் இடையே முதிர்ச்சி வெளிப்பட வேண்டும். கட்சிக்கும், தலைமைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பகிர்வது, வேதனையாக உள்ளது.
''இதனால், பல்வேறு நெருக்கடிகள் மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாவதுடன், கட்சி முன்னணி நிர்வாகிகளின் அணுகுமுறையாலும் காயப்பட வேண்டியிருக்கிறது,” என்றார்.
இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதால், அரசின் செயல்பாடுகளையும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினரையும் விமர்சிக்க வேண்டாம். அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, வி.சி., தலைமை அறிவுறுத்தி உள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து, வி.சி.,நிர்வாகிகள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., கூட்டணியில் தான், வி.சி., இடம்பெற உள்ளது. அரசின் மீது விமர்சனங்கள் இருந்தாலும், மதவாத சக்திகளும் கூட்டணி பலத்துடன் வருவதால், எங்கள் கூட்டணியை பலப்படுத்துவது அவசியம். எனவே, கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்காத வகையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. மீறி செயல்படுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -