'விடியல் பயணம்' என உயிரோடு விளையாடுவதா?: காலாவதி பஸ்களை இயக்குவதால் மக்கள் 'திக் திக்'
'விடியல் பயணம்' என உயிரோடு விளையாடுவதா?: காலாவதி பஸ்களை இயக்குவதால் மக்கள் 'திக் திக்'
ADDED : பிப் 16, 2025 02:04 AM

சேலம்: 'விடியல் பயணம்' என, மக்கள் உயிரோடு விளையாடும் அவலம் நிலை உள்ளதாக, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. மேலும், காலாவதி பஸ் இயக்க அனுமதி கொடுத்தோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.
பா.ஜ., சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் கோபிநாத், தமிழக அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனருக்கு அனுப்பிய மனு:
கடந்த, 12ல், சேலம் மாவட்டம் ஆத்துாரில் இருந்து தவளப்பட்டிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ், கள்ளுக்காட்டில், 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பள்ளி மாணவர், மூன்று பேர் உட்பட ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர்.
விபத்துக்குள்ளான பஸ்சுக்கு தகுதிச்சான்று, 2024 ஜூலை, 27ல் முடிந்திருந்தது. தகுதியற்ற பஸ்சை இயக்கியதே விபத்துக்கு காரணம். இதுபோன்று பணிமனைகளில் ஏராளமான பஸ்கள் உள்ளன.
தமிழக முதல்வரும், போக்குவரத்து அமைச்சரும், 'விடியல் பயணம்' என சொல்லி, மக்கள் உயிர் பயத்துடன் பயணிக்கும் அவல நிலையை உருவாக்கி வருகின்றனர். காலாவதி வாகனம் இயக்க அனுமதி கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கோபிநாத் கூறுகையில், ''கள்ளுக்காட்டில் விபத்துக்குள்ளான பஸ் எண்ணை வைத்து, ஆர்.டி.ஓ., இணையதளத்தில் ஆய்வு செய்ததில், அந்த பஸ் காலாவதி என தெரிந்தது. பள்ளி பஸ் விபத்தில் சிக்கினால், அதற்கான அனுமதி, தரத்தை ஆய்வு செய்து கிடுக்கிப்பிடி போடும் அரசு, ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் பயணிக்கும் அரசு பஸ்களை கண்டு கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து, மாநில தலைமைக்கு கொண்டு சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என்றார்.

