மத்திய அரசுக்கு பிச்சை போடுவேன் என்பதா?: எம்.எல்.ஏ., பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்
மத்திய அரசுக்கு பிச்சை போடுவேன் என்பதா?: எம்.எல்.ஏ., பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்
ADDED : பிப் 17, 2025 12:28 AM

திருச்சி: “வரி செலுத்தியதை, மத்திய அரசுக்கு நான் போட்ட பிச்சை என்று சொன்ன தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டி, தன் கருத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையேல், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்,” என பா.ஜ., நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வான பழனியாண்டி அலுவலகத்தை, பிரியாணி கடை நடத்த வாடகைக்கு விட்டு இருப்பதாக, அ.தி.மு.க.,வின் திருச்சி மாநகர் மாவட்ட செயலர் சீனிவாசன், சமீபத்தில் குற்றஞ்சாட்டி பேசினார்.
அதன்பின், திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., பழனியாண்டி, சீனிவாசன் கருத்துக்கு பதிலடி கொடுத்து பேசினார்.
அப்போது, “நான், நான்கு தலைமுறைக்கு முன்பே பணக்காரன்; அப்படியென்றால் பரம்பரை பணக்காரன். ஆண்டுதோறும், மத்திய அரசுக்கு, ஜி.எஸ்.டி.,யாக மட்டும் 2 கோடி ரூபாயும், இதர வரி வகையில் 1 கோடியே 5 லட்சம் ரூபாயும் கட்டுகிறேன்.
''இப்படித்தான், மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் பிச்சை போட்டுக் கொண்டு இருக்கிறேன். அதனால், அ.தி.மு.க., மாநகர் மாவட்டச் செயலர் சீனிவாசனுக்கு நாவடக்கம் தேவை,'' என்றார்.
இந்நிலையில், சமீபத்திய மத்திய பட்ஜெட் தொடர்பாக, தேசிய மின் நுாலகம் மற்றும் ஆவணப்படுத்துதல் துறை ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம், பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் ஆகியோர் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
வரி செலுத்துவதை பிச்சை என ஒரு எம்.எல்.ஏ., பேசினால், அது வாய்க்கொழுப்பு. சமூக விரோதி போல ஒரு எம்.எல்.ஏ., பேசியுள்ளார். அதனால், அவருடைய பேச்சை வைத்து, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், எம்.எல்.ஏ., குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
கிடைக்கும் தகவல்களை வைத்துக் கொண்டு, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான்கு தலைமுறையாக, தான் பணக்காரராக இருப்பதாகவும் எம்.எல்.ஏ., சொல்லி இருக்கிறார். அப்படியென்றால், அவருடைய அப்பா, தாத்தாவெல்லாம் ஜமீன்தாரராக இருந்தனரா; பல கோடிகளை வரியாக செலுத்தும் அளவுக்கு எம்.எல்.ஏ.,வின் சம்பாத்தியத்துக்கான வழி என்ன?
'எம்.எல்.ஏ., மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. சில வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளார். ஆனாலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார்.
நான் செலுத்தும் வரி, மத்திய அரசுக்கு போட்ட பிச்சை என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு எங்கிருந்து வந்தது தைரியம்? விமர்சனம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் பேசலாமா? வாய்க்கொழுப்பு எம்.எல்.ஏ., தான் சொன்ன கருத்தை திரும்பப் பெற வேண்டும்.
இல்லையென்றால், பா.ஜ., சார்பில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆசிர்வாதமும், கவிதாசனும் கூறினர்.