'பயப்படாதீங்க' சுற்றி நம்ம ஆளுங்கதான் இருக்காங்க ஆட்சியில் பங்கு கேட்க காங்., செயற்குழுவில் வலியுறுத்தல்
'பயப்படாதீங்க' சுற்றி நம்ம ஆளுங்கதான் இருக்காங்க ஆட்சியில் பங்கு கேட்க காங்., செயற்குழுவில் வலியுறுத்தல்
UPDATED : ஏப் 24, 2025 03:02 AM
ADDED : ஏப் 23, 2025 06:33 PM

'தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு குறித்து பேசும்போது, ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவியை தைரியமாக கேட்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், மூத்த தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசியதற்கு, கட்சி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 'யாருக்கும் பயப்பட வேண்டாம். தாராளமாக பேசுங்கள்' எனக்கூறி ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில், நடந்தது. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, முன்னாள் தலைவர்கள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். போப் பிரான்சிஸ், குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் தலைவர்கள் பேசியது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், ''கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழக காங்.,கின் எட்டு மாவட்டங்களில் தலைவர் இல்லை. அம்மாவட்டங்களில் ஒருவர் கூட, தலைவராக தேர்ந்தெடுக்க முடியாத நிலை, கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. எட்டு மாவட்டங்களில் தலைவர் இல்லை என்றால், 30 எம்.எல்.ஏ., தொகுதிகளில், கட்சி வளர்ச்சிப் பணிகள் பாதிக்கும்,'' என்றார்.
முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''நான் தலைவராக இருந்தபோது, பூத் கமிட்டிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது கிராம கமிட்டி நிர்வாகிகள் நியமிப்பது தேவையில்லை,'' என்றார்.
ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவரும், முன்னாள் சட்டசபை காங்கிரஸ் தலைவருமான கே.ஆர்.ராமசாமி பேசுகையில், ''செல்வப்பெருந்தகைக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என, கட்சி நிர்வாகி போஸ்டர் ஒட்டியதற்காக, அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். அது ஏற்புடையதல்ல. அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தானே எல்லோரும் கட்சி நடத்துகின்றனர். அதே தாகத்துடன் தான் நாமும் இருக்கிறோம்.
'நேற்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம், நாளைய முதல்வர் என போஸ்டர் அடிக்கும்போது, காங்கிரசை சார்ந்தோருக்கு துணை முதல்வர் பதவி கேட்டு போஸ்டர் அடிப்பதில் என்ன தவறு? துணை முதல்வர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வேண்டாம் என்றால், அப்பதவியை எனக்கு தாருங்கள். நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி கேட்பதற்கு, யாரும் பயப்பட வேண்டாம்; தைரியமாக கேட்க வேண்டும்,'' என்றார்.
மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசுகையில், ''எந்தந்த மாவட்டங்களில் கட்சிப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன; எங்கெங்கு நடக்கவில்லை என்ற பட்டியல் தயாரித்து என்னிடம் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன். ஆட்சியில் பங்கு கேட்கும் விவகாரத்தை, நாம் தாராளமாக பேசலாம். கட்சி கூட்டத்தில் பேசாமல், இதை நாம் எங்கு பேசுவது. யாருக்கும் நாம் பயப்பட வேண்டாம். சுற்றிலும் நம்ம ஆளுங்க தான் இருக்காங்க.
''நான் பொறுப்பேற்ற மாநிலங்களில், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் விதத்தில் பணியாற்றி உள்ளேன். எனவே, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே நம்முடைய முதல் வேலையாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆட்சியில் பங்கு; துணை முதல்வர் பதவி குறித்தெல்லாம் தாராளமாக கேட்கலாம். அதில் தவறில்லை. ஆனால், அதற்கு முன், இவற்றையெல்லாம் கேட்க, நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில்,''டில்லி தலைமை சொல்கிறபடி செயல்படுவோம். அதற்காக, எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற நிலையில் பேசி விட முடியாது. எதையும் நிதானமாகத்தான் செய்ய வேண்டும். அதற்கேற்ற வகையில் பொறுப்பான வார்த்தைகளோடு பேச வேண்டும்,'' என்றார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -