அற்ப இன்பங்களுக்காக வாழ்வை அழிக்காதீர்: மாணவர்களுக்கு நெல்லை அதிகாரி கடிதம்
அற்ப இன்பங்களுக்காக வாழ்வை அழிக்காதீர்: மாணவர்களுக்கு நெல்லை அதிகாரி கடிதம்
ADDED : நவ 16, 2024 01:31 AM

திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக எழுதியுள்ள, இரண்டு பக்க கடிதம், 66,000 மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.
குழந்தைகள் தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் 66,000 மாணவ -- மாணவியருக்கு, அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
நீங்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள். வாசிப்பு, விளையாட்டு, மன்ற செயல்பாடு, சாரண இயக்கம், பசுமைப் படை, நாட்டு நலப்பணித் திட்டம், கலைத்திருவிழா என, உங்களின் திறமையை வெளிப்படுத்த, பல மேடைகள் உள்ளன.
வெட்டி பந்தா
இவற்றில்தான் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வேண்டுமே தவிர, வெட்டி பந்தாக்களிலும், வசனங்களிலும், வன்முறைகளிலும் அல்ல.
பள்ளிகள், தேர்வில் வெற்றி பெற வைக்கும் இடம் மட்டுமல்ல; உங்களின் தனித்திறன்களை வளர்க்க, களம் அமைக்கும் இடமும் கூட.
சக மாணவர்களிடமும், உங்கள் ஆசிரியர்களிடமும், அன்பை விதையுங்கள். நாம் எதை விதைக்கிறோமோ, அதையே அறுவடை செய்ய முடியும். அன்பும் சமாதானமும், ஒருபோதும் உங்களை ஏமாற்றாது.
உங்களுக்கு துணைபுரியவும் வழிநடத்தவும் ஆசிரியர்கள் உள்ளனர். பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களையும், வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றங்களையும், உங்கள் ஆசிரியர்களிடமும், பெற்றோரிடமும் மனம் விட்டு பேசுங்கள்; தீர்வு காணுங்கள்.
பெற்றோரை அவ்வப்போது பள்ளிக்கு அழைத்து வந்து, ஆசிரியர்களை சந்திக்க செய்யுங்கள். உங்கள் ஆசிரியர்கள், பெற்றோருடன் இணைந்து செயல்பட்டால், உங்கள் இலக்கை எளிதில் அடையலாம்.
தலைகுனிவு
முதிர்ச்சியற்ற ஈர்ப்பு, போதை என அற்ப இன்பங்களுக்காக, உங்களின் அழகான வாழ்கையை அழித்துக் கொள்ளாதீர். எளிமையாக இருக்கும் தவறான பாதைகள், உங்களின் வாழ்வை சீரழித்து, தலைகுனிய வைக்கும்.
தவறாக வழிகாட்டுவோரிடம் இருந்தும், தவறான நபர்களிடம் இருந்தும் தள்ளி இருங்கள். எப்போதும் சுறுசுறுப்பு, விளையாட்டு, புன்னகை, நிறைய கற்கும் ஆர்வத்துடன் இருங்கள்.
பொதுத்தேர்வை ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன், துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் ஆண்டு பொதுத்தேர்விலும், உங்கள் வாழ்விலும் வெற்றி பெற அன்பு வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- நமது நிருபர் - -.