UPDATED : பிப் 10, 2024 05:49 AM
ADDED : பிப் 10, 2024 02:01 AM

'கனவு - நிஜம்' என்ற பெயரில், பிரதமர் மோடி அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து, சமூக வலைதளங்களில், தமிழக பா.ஜ., தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
'கனவு' என்ற தலைப்பில், 'அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்' என்றும்; அதற்கு எதிரே பிரதமர் மோடி படத்துடன், 'நிஜம்' என்ற பெயரில், 'பகவான் ஸ்ரீராமர் அயோத்திக்கு வந்து விட்டார்' என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 'நாட்டில் ஒரே அரசியலமைப்பு, ஒரே சட்டம் இருக்க வேண்டும்' என்பது கனவு என்றும், அதற்கு எதிரே, 'ஜம்மு காஷ்மீரில், 370 பிரிவு நீக்கப்பட்டது' என்பது நிஜம் என்றும் சொல்லப்பட்டு உள்ளது. 'இந்தியா வறுமையில் இருந்து விடுபட வேண்டும்' என்பது கனவு; 'ஒன்பது ஆண்டுகளில், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்' என்பது நிஜம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
'லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களின் அதிகபட்ச இருப்பு' என்பது கனவு; 'லோக்சபா, சட்டசபைகளில் அதிக பெண்கள் பங்கேற்பு' என்பது நிஜம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், மத்திய அரசு அமல்படுத்திய ஒவ்வொரு திட்டங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அடுத்தடுத்த கட்டங்களில், இதையே தி.மு.க.,வோடு ஒப்பிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபடவும், தமிழக பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர். தி.மு.க., கடந்த தேர்தல்களில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு, அதில் எதையெல்லாம் செய்யாமல் மக்களை ஏமாற்றினர் எனவும், இதே கனவு - - நிஜம் பாணியில் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் கூறின.