போதைப்பொருள் பறிமுதல் விவகாரம்: மலையாள நட்சத்திரங்களுக்கு சிக்கல்?
போதைப்பொருள் பறிமுதல் விவகாரம்: மலையாள நட்சத்திரங்களுக்கு சிக்கல்?
UPDATED : அக் 10, 2024 02:44 AM
ADDED : அக் 09, 2024 11:28 PM

கொச்சி: கேரளாவில், பிரபல தாதா ஓம் பிரகாஷிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், பிரபல மலையாள திரைப்பட நட்சத்திரங்கள் ஸ்ரீநாத் பாசி, பிரயாகா மார்ட்டின் ஆகியோரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கேரளாவின் கொச்சி மாவட்டத்தில் உள்ள இரவுநேர மதுபான விடுதிகளில் வெளிநாடுகளில் இருந்து எடுத்து வரப்பட்ட, 'கோகைன்' என்ற போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி, மரடு என்ற இடத்தில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில், சமீபத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா ஓம் பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ஹோட்டலில் தங்கியிருந்த தாதா ஓம் பிரகாஷை, பிரபல நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டின் உட்பட, 20 பேர் சந்தித்தது தெரிய வந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, நடிகர்ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டின் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கொச்சி நகர போலீஸ் கமிஷனர் புட்டா விமலாதித்யா கூறுகையில், ''ஓம் பிரகாஷ் தங்கியிருந்த அறையில் இருந்து பல்வேறு போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். இவை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
''ஓம் பிரகாஷை யார் யார் சந்தித்தனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக, நடிகர்களுக்கு எந்த சம்மனும் வழங்கப்படவில்லை. தேவைப்பட்டால் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும்,'' என்றார்.
ஏற்கனவே, பாலியல் பலாத்கார புகாரில் மலையாள நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களின் பெயர்கள் அடிபடுவது, திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.